Tuesday, October 27, 2009

தனி குறும்படம் - பார்வை

முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி.

அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான்.

நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது.

இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொல்லுதுன்னு எடுத்துக்கலாம். அவ்வளவு தான். அவ்வளவு தான்னா அவ்வளவே தான். இதுக்கு மேல ஒண்ணும் பெருசா ஆராய்ச்சி பண்ணத் தோணலை (அசை போடும் போது).

சைதாப்பேட்டையில் இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் நண்பர்களுடன் குடி இருக்கிறீர்கள். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லப் பிடிக்கலை. நண்பர்கள் சென்று விட்ட பின்பு நீங்கள் உணரும் தனிமைன்னு பாத்தா பொருந்தும். குறும்படங்கள் அவற்றின் கால அளவில் (இந்தப் படம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியது) தான் சொல்ல வரும் கருத்தை இப்படித் தான் விவரிக்க முடியும். பெரும்படங்கள் பார்த்துப் பழகிய நமக்கு அவ்வளவு தானா படம் என்ற ஏமாற்றம் துவக்கத்தில் இருக்கலாம். ஆனால், புதுப்பாடல்/புதுமைச் சிறுகதைகளை ஓர்ந்து படித்தவர்களுக்கு இந்த உணர்வு போதுமானதாக இருக்கும்.

நுட்பங்கள்னு பாத்தா, காலைல காலதர்(சன்னல்) வழியா கதிர்கள் அழகா அறைக்குள்ள விரியும். தொம், தொம்னு ஓசை கேக்கும். உடனே புரண்டு அப்புறம் எழுந்திருப்பான். புறக்காரணிகள் தான் இப்படி எழுப்புதுங்கறது புரியும். அப்புறம் நடந்த உரையாடலில் அந்த ஓசை யாரோ துணி துவைக்கும் ஓசைன்னு விளங்குனாங்க.

அப்புறம் அந்தப் பெண், யாருன்னு தெரியாது. அவங்க பாட்டுக்கு கையைக் கட்டிட்டு நின்னு வெறிச்சுப் பாப்பாங்க. நாமளா என்ன வேணும்னா உணர்ந்துக்கலாம். அடுத்து அந்தப் பூனை. அது படுக்கைல இருந்து துள்ளி எழுந்து சுவரருகே போய் கத்துவது அவனது தனிமையின்/தனிமைப் படுத்தப் பட்டதின் வலிகளைச் சொல்லுவதா எடுத்துக்கலாம். அந்தப் பூனை டக்குன்னு தவ்வி காலதர்க் கண்ணாடிக் கதவுகள்ல ஏறித் திரும்பும். தப்பிக்க நினைக்கிற மனப்பான்மையா??? பாக்குறவங்களைப் பொறுத்தது.

ரொம்ப அளக்காமப் (யோசிக்காம) படம் பாத்தா எளிமைப் புரியுங்கறது தான் இந்தப் படம் எனக்கு சொல்லும் சேதியாப் படுது. இதே அணுகுமுறைல புதுப் பாதையில் (நவீனங்கள்) வரும் படைப்புகள் காட்டும் மெல்லிய உணர்வுகளை நுகர முடியும்னு நம்பறேன்.

2 comments:

said...

இன்னாது நம்ம தினம் பண்ணுவதை எடுத்தா அதுக்கு பேரு படமா? ஒன்னு புரியலை. இதுக்கு பேரு ரசனையா? நமக்கு அது எல்லாம் வராதுன்னா? நன்றி.

said...

கதை என்பது என்ன, ஒரு பாடல் என்ன சொல்லுது இது மாதிரி சின்னச் சின்ன கேள்விகள்ல துவங்குங்க.

//நமக்கு அது எல்லாம் வராதுன்னா?//
முன்முடிவுகள் வேண்டாமே :-)