Monday, June 30, 2008

திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?

அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்! (திங்கள் சத்யா)

மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள்.

திங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா?

1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்?

2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது?

3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி?

4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்?

இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.

Wednesday, June 25, 2008

எறும்புடன் ஒரு பயணம் - புனைவு

இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது.

நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும்.

இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.

அப்போது தான் அந்த எறும்பைக் கவனித்தேன். என் சாப்பாட்டுப் பையின் மேல் ஒரு கடி எறும்பு (சிவப்பா இருக்குமே அது தான்) ஊர்ந்து கொண்டிருந்தது. இது எப்படி இங்கே? பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது தொத்திக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பேருந்தில் விட்டால் யார் காலிலாவது பட்டு நசுங்கி விடும். பையின் விளிம்புக்கு வரும் போதெல்லாம், அதைப் பிடித்து மீண்டும் நடுவில் விட்டு கண்காணித்துக் கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய நிறுத்ததில் ஏதாவது செடியின் மேல் விட்டு விடலாம் என்று முடிவு.

இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இப்படித் தொடர முடியலை. விரலில் ஏறிய எறும்பு விரலசைவில் தன் சமநிலை தவறி காற்றில் மெல்ல அசைந்து இருக்கைக்கும், பேருந்தின் உட்புறச்சுவருக்கும் இடையே தன் கைகளை பிடிமானத்துக்காக விசிறியவாறு விழுந்தது. அது கைகளை விசிறிய போது அப்படியே மெதுவாக உருமாறி என் பெப்போவைப் போல் தெரிந்தது. 'அய்யோ, என்ன செய்வேன்' என்று பதறி ஒரு நொடியில் கீழே விழுந்த பெப்போவைத் (அதாங்க, எறும்பு) தேடலானேன். பக்கத்தில் அமர்ந்திருந்த சீனப் பெண் 'என்னாச்சு, இவனுக்கு' என்பது போல் பார்த்தார். அசடு வழிந்த நான் இருக்கையில் அமர்ந்த படி கால்களை அகட்டிக் கொண்டும், பையை நகர்த்திக் கொண்டுமிருந்தேன். கடுப்பாகி, அந்தப்பெண் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டார்.

எல்லோரும் என்னைப் பார்த்த போதும், இப்போது கொஞ்சம் வசதியாய் இருக்கவே நன்றாக குனிந்து தேடினேன். அகப்பட்டுக் கொண்டது. மகிழ்ச்சியுடன் கையில் எடுத்து உத்துப் பார்த்தேன். ஏதாவது அடி பட்டிருக்கப் போவுது. உற்றுக் கவனித்ததில் அது பெப்போ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். நிறுத்தம் வந்தவுடன் அந்த எறும்பை அங்கிருந்த மதில் சுவர் செடியில் விட்டு, விட்டு 'அப்பாடா'ன்னு சாலையைக் கடந்து தொடர் வண்டி நடை மேடைக்கு வந்தேன். எல்லாம் போன ஞாயிறு 'honey, I shrunk the kids' சன் தொலைக்காட்சியில் பார்த்ததால் வந்த உள்ளக் குளறல். எப்படியோ ஒரு எறும்பை காப்பாத்தி இருக்கேன். :-)

Tuesday, June 24, 2008

இரகு வெண்பா - காவியம் பாடல்

இராமன் கதை இங்கே

நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல்

நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை
பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)
ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும்
பாயிரமாய்ச் செய்தார் பரிந்து.

இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல்

இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார்
வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும்
வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத்
தேனனையும் பாக்களைத் தான்.

புகழுறப் பாடி அவைதனை அடைதல்

பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர்
தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய
மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும்
ஒக்கவே சென்றார் உவந்து.

இசைத்த இளையோர் இருவரும் மன்றில்
அசைத்த அகமொரு வாரி - விசையுறு
வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே
யாசகம் பாடும் சிறார்.

வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர்.

மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை
இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப்
பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில்
இடைவெளி வேண்டியேப் பெற்று.

சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது

முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது
மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும்
அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில்
சிறிதும் கலையா(து) இருந்து.

முந்தைய பகுதி      அடுத்த பகுதி

Friday, June 20, 2008

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே


காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல்

கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'

வலியன் மறுமொழி

துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே
அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி
கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட
மேவிடுவோர் எண்ணிக்கை மேல்.

பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல்

அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்ஙனம்இல் வாழ்வு துறந்து.

உள்பட - உண்மை உள்ளத்தில் பட

இனியவர் தேடி இரகுவினை அறிதல்

முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்
'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும்
காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே
காடையின் கதறும் ஒலி!

வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல்

கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை
புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை
விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு
மண்ணுற வாழும் முதல்.

உந்தி - துணை, பறவை
முதல் - தொடக்கம்

பறவை உயிரைப் பறித்த தருணம்
துறவி பலுக்கும் இராகம் முதலில்
அமைத்து படிக்கப் பணித்தார் உலகம்
சுவைக்க இராமன் கதை.

அறிமுகம்            அடுத்த பகுதி

Wednesday, June 18, 2008

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன்.

இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க.

அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரிந்து கொள்வதற்காக) உரை எழுதும் பணியில் இருந்தோம். வெண்பாவின் வீச்சும், செப்பலோசையின் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. நண்பர்கள் குழுமத்தில் அவ்வப்போது வெண்பா எழுதி துன்புறுத்தியது உண்டு. இப்பொழுது அகரம் அமுதாவின் வெண்பாப் பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன். இப்படி பிறரின் தொடர்ந்த ஊக்கமும் என்னை இன்னும் முயற்சிக்கவே தூண்டியது.

படிச்சா மட்டும் போதுமா? திறம் அறிய வேண்டாமா? இதோ, கீதா சாம்பசிவம் அவர்களின் இராமாயணத் தொடரை அதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன். வாழ்த்தும், முதல் இடுகையும் வெண்பாவில் எழுதி பின்னூட்டி விட்டேன். அதில் சில அடிப்படைப் பிழைகள். ஆசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டினார். இந்த தொடரில் அவர் பின்னூட்டத்தில் வெளிப்படுவார் என நம்புகிறேன். கீதாம்மாவின் ஒவ்வொரு இடுகையையும் வெண்பாவால் தொடரவே இந்தத் தொடர். இசைவு தெரிவித்த அவருக்கு என் சிறப்பான நன்றிகள் பல.

பிழைகளைப் பொறுத்து, திருத்துமாறும் கேட்டுக் கொண்டு, அவருக்கு எழுதிய வாழ்த்துடன் தொடரைத் துவக்குகிறேன்.

பொதுவாய் எழுதும் பதிவில் இராமன்
மெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்
திடினும் உசாத்துணை என்றே எழுதத்
துடிக்கும் உமக்கேஎன் வாழ்த்து!

Monday, June 16, 2008

தசாவதாரம் - பார்க்கலாம்!

'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன்பு இவ்வாறு குழம்ப நேர்ந்ததில்லை.

பாட்டி கமலிடம் நுண்ணுயிர்க்குப்பி மாட்டுவதில் இருந்து துவங்குகிறது இழுவை.... கதைக்கு தொடர்பே இல்லாமல் கலிஃபுல்லாவும், பூவராகவனும் வருகிறார்கள். எப்படா, இந்த குழப்பம் முடியும்னு ஆகிப் போச்சு. அதுவும் கலிஃபுல்லா பேசுவது எளிதில் விளங்கவில்லை. பூவராகவன் அஞ்சல் பெட்டி 520 சிவாஜியை நினைவுபடுத்துகிறார்.

ஜப்பானிய கமலைக் காட்டும் போதே இறுதிக் காட்சி இவருக்கும், ஃபிளட்சருக்கும் தான் என ஊகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த சண்டைக் காட்சி அருமையாக இருந்தது. தோல்வியடைந்து, சாகும் தருவாயில் ஹாலிவுட் பாணியில் 'என் சாவை உன்னால் தீர்மானிக்க முடியாது' என்று ஃபிளட்சர் குப்பியை கடிக்கும் போது அந்த கதைஉருவின் மேல் சற்று மதிப்பு ஏற்படுகிறது.

அசரடிக்கும் உழைப்பு. வியக்க வைக்கும் தொழில் நுட்பம். ஆனால் அவை எவ்வகையிலும் தரத்திற்கு உதவவில்லை. நெருக்கமான காட்சிகளில் கண்களை ஒட்டி இருக்கும் ஒப்பனை ஒட்டப் பட்டதாகவே தெரிகிறது. இயல்பான மாந்தர்களுடன் ஒப்பனை புனையப்பட்டவர் வரும்போது ஒப்பனையின் 'அழகு' தெள்ளெனத் தெரிகிறது. (நாயுடு ஒப்பனை மட்டும் செம்மையாக இருக்கிறது.) வரைந்து இணைக்கப் பட்ட காட்சிகள் (graphics), மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட தரம் என்றாலும் உயர் தரம் என்று ஒப்புவதற்கில்லை. வரதராஜரை கடலில் போடுவது, சுனாமியில் சிதறுண்ட களம் இவையெல்லாம் கடும் உழைப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றன. அதுவே அவற்றின் குறையாகவும் அமைந்து விடுகிறது. இறுதிக் காட்சியில் புஷ் மேடையில் இடம் வலமாக நடப்பது, கே. எஸ். ரவிக்குமாரின் கவுண்டமணி நடனம்... சரி, சரி அதெல்லாம் ரசிகர்களுக்கான தூவல், கண்டு கொள்ள வேண்டியதில்லை.

எல்லா தோற்றங்களுக்கும் ஏற்றவாறு திறம்பட உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார் உலக நாயகன். அவரைப் பாராட்டி வேண்டுமானால் தனிப் பதிவு போடலாம். கமலின் ஒப்பனைத் தோற்றங்களைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் NaCl க்குக்கூட பயன்படுத்தவில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப கமலையே பார்த்து அலுத்துச் சலித்துப் போகிறோம்.

தரம், உலகத் தரம்னு எல்லாம் படிச்சுட்டு போனது தான் தப்பு. மத்த படி படம் ஒரு முறை பார்க்கலாம் வகை.

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !

மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு.

'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்'

'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.'

இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது.

'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முகம் கழுவப் போனேன். அப்பவே மணி 5:15. இனிமே ஃபேர்பிரைஸ் போயி எதுவும் வாங்க முடியாது. காப்பிய குடிச்சுட்டு பட, படன்னு ஆயத்தமாகி இருந்த ஒரு அரிசி வடை பொட்டலத்தை (packet? அது பேரும் தெரியலை, சீனத்துல எழுதி இருந்துச்சு) எடுத்துட்டு சாலைக்கு விரைந்தேன். வாடகை வண்டி எடுத்தப்ப 5:50 - 6 மணி இருக்கும். இடையில கோவி அண்ணாட்ட அலைபேசி வர்றேன்னு உறுதிப் படுத்திட்டேன்.

20 நிமிஷப் பயணத்துல அங்க போய் சேர்ந்தேன். யாரையும் முன்னப் பின்ன பாத்தது இல்லை. எப்படி எடுத்துக்குவாங்களோன்னு ஒரு மாதிரி பயந்துட்டே போனேன். கோமளா'ஸ் பின்புறம் கடற்கரையைப் பாத்தாப்புல பேசிட்டு இருந்தாங்க. என்னையப் பாத்ததும் எல்லோருமே இயல்பா கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். யாரும் தாமத்ததிற்கு காரணம் கேக்கலை. 'அப்பாடா'ன்னு இருந்தது. இல்லைனா பொய் ஏதாவது சொல்லணுமே. தூங்குனேன்னு சொல்லத் தயக்கம். அப்படியே எழுந்து கடற்கரையை ஒட்டி கிடையைப் போட்டோம்.

அரசுவின் சில பதிவுகள் படிச்சுருக்கேன். அதனால அவர்ட்ட பேச கொஞ்சம் அச்சமா கூட இருந்தது. கொள்கைப் பிழம்புல சூடு விழுந்துடும்னு நினைச்சுக்கிட்டே போயி...., சரியா அவர் பக்கத்துலேயே உக்காந்தேன். பேசாம விசைப் பலகை ஒட்டிகளை வாங்கிட்டு விலகிடலாம்னு பாத்தா இப்படி ஆயிருச்சேன்னு வரிசைல வந்த அல்வாவை வாயில வைச்சுக்கிட்டு அமைதி ஆயிட்டேன். ஆனா, அரசு என் எதிர்பார்ப்பை பொய்யாக்கிட்டார். ஒவ்வொரு பொருள்லயும் தெளிவாக, புன்னகை மாறாமல், அடுத்தவர் பேச வாய்ப்பளித்து என்னை இயல்பா பேச வைச்சுட்டார். இடையில நாங்க எல்லாம் சேர்ந்து போட்ட மொக்கையையும் ரசிச்சார்.

சிவராம் முருகன் தன் வலைபதிவு நேர்வுகளை விவரிச்சு எல்லோரையும் கல, கலப்பூட்டினார். அதுவும் 'டேய், இது உனக்குத் தேவையான்னு கேட்டு சேமிச்சு வைச்ச பதிவை அழிச்சுருவேன்' ன்னு வடிவேலு மாதிரி சொன்னதும் சாப்பிட்ட அல்வா வெளிய வர்ற மாதிரி சிரிச்சோம். குமார் துபாய் போறதைப் பத்தியும், அதற்கான நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சொன்னார். எவ்வளவு கெஞ்சியும் ஜெகதீசன் பேசவே இல்லை. சாப்பிடப் போனப்ப தான் 'எனக்கு ஒரு தோசை' ன்னு சொன்னார். கிரியும், நானும் வெற மாதிரி துணுக்குத் தோரணத்தைக் கட்டினோம்.

'உங்க வேலையிடம் எந்தப் பகுதில இருக்கு?' பதில் சொல்லவும்

'அங்க தான் என் அலுவலகமும் இருக்கு. எந்த கட்டிடம்', பதில் சொல்லவும்

'அங்க தான் நானும் வேலை பாக்குறேன். எந்த நிறுவனம்?'

'ஆ! நானும் அங்க தான் வேலை பாக்குறேன்!'

வேற, வேற பிரிவுகள்ல வேலை செய்யுறோம். அதனால தான் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கலை.

பிறகு சாப்பிடப் போனோம். எல்லோரும் வேணுங்கிறதை கேட்டு வாங்கிட்டு வந்தாச்சு. கடைசி தட்டை எடுக்கும் போது நானும், அரசுவும் கோவிண்ணாட்ட 'போண்டா என்னாச்சு'ன்னதும், அவர் முகத்துல தெரிஞ்ச கலவரத்தைப் பாக்கணுமே! வேக, வேகமா போயி சீட்டு வாங்கற இடத்துல கேட்டார். போண்டா இல்லைன்னு சொன்னதும் அவருக்கு ஏமாற்றம்னாலும், 'அப்பாடா, என் தப்பு இல்லை' ன்றா மாதிரி ஒரு பெருமூச்சு விட்டார்.

சாப்பிட்ட பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பறிமாறி கொண்டு கிளம்பினோம். மற்ற எல்லோரும் பெடோக் போகணும், நானும் அரசுவும் அமோக்கியோ செல்வதால் தனியாகப் பிரிந்தோம். அங்கே வராத பேருந்துக்காக (ஞாயிறு மட்டுந்தான் வருமாம்) ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. இனிமையான சந்திப்பின் முத்தாய்ப்பாக அந்த ஒருமணி நேர உரையாடல் அமைந்தது. பின்னர் வேறு பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். மணி அப்போது 11ஐத் தாண்டி இருந்தது!

டோன் லீ வருவார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் பதுங்கு குழிக்குள்ளேயே இருந்து விட்டார் போல. என்னைக் கவர்ந்த அறிமுகப் பதிவர்களில் அவரும் ஒருவர்.

Thursday, June 5, 2008

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று,
இலந்தைப் பழம் போல் என்னுள்!

உரித்துத் தின்ன இயலாது;
முற்றும் முழுங்கவும் முடியாது;

மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது!

அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.