Monday, August 27, 2007

பின்னூட்டம் நீண்டால் பதிவாகும்!

லக்கி அவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் இட தட்டிய போது மிகவும் நீண்டு விட்டது. அதனால் இப்படி ஒரு பதிவு.


என் கொல்டி நண்பன் அரவம் என்பதற்கு அரண்டு போக வைக்கும் கதை ஒன்று சொன்னான்.


இராவணனை வீழ்த்தி திரும்பும் வழியில் புஷ்பக விமானத்தில் இருந்த வானரங்கள் ஆரவாரத்துடன் இருந்தன. அனுமார் வந்து கண்டித்த போது 'அரவம், அரவம்'னு (தெலுங்கில் அரவம் என்றால் கத்த மாட்டோம்னு பொருள்) சொன்னாங்களாம். சில தடவைக்குப் பிறகு அனுமார் கடுப்பாகி எல்லோரையும் தூக்கி கீழே போட்டுட்டாராம். அவங்க விழுந்த இடம் தமிழ்நாடு. அதனால தான் தமிழ் பேசுறவங்களை அரவம்னு சொல்றாங்க. அப்படி பாத்தா நீங்கள்லாம் குரங்குன்னு சிரிச்சான்.

'அதெப்படி அரவம், அரவம்னு தெலுங்குல கத்தினவுங்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவுங்களா இருக்க முடியும்? புலவர் குழந்தை சொன்ன மாதிரி திராவிடனான இராவணனை தோக்கடிச்சவுங்கன்ற கடுப்புல கீழ விழுந்தவுங்களை துரத்தி அடிச்சுட்டாங்க தமிழ்நாட்டு மக்கள். அவங்கலாம் திருப்பதிக்கு அப்பால ஓடிப்போயிட்டாங்கன்னு' சொன்னேன். அப்ப நண்பனின் முகம் நான் சொன்னதை உறுதிப்படுத்துவது போல இருந்தது.

Friday, August 24, 2007

எங்கும் இந்தியா

அண்மைக் காலமாக வெளிவரும் செய்திகள் மனதுக்கு உவகையூட்டுவதாக உள்ளது. இந்தியர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்களாக பார்க்கப்படுகின்றனர். வெளி நாடுகளில் இந்தியப் தயாரிப்புகள் மீது வாங்குவாரின் நம்பிக்கை கூடியுள்ளது.

இது எல்லாவற்றையும் விட, அனைவரும் நம்மை நண்பர்களாகத் தான் பார்க்கின்றனர். ஒரு பக்கம் பிரேசில், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் இணைந்து ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சித்து வருகின்றன. அடுத்து பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா தங்களை BRIC நாடுகள் என அழைந்துக் கொள்கின்றனர். ஒத்துழைக்க முனைகின்றனர். அமெரிக்கா ஒரு படி மேலே சென்று இந்தியாவுடன் (மட்டும்) அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ள துடிக்கிறது. இந்த வாரம் இந்தியா வந்த ஜப்பான் தலைவர் (பிரதமரை என்னவென்று அழைப்பது?) அபே இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுடனான வணிகம் 500 கோடியை எட்டும் என்கிறார். அத்துடன், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஒரு வணிகக் கூட்டமைப்பை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். இப்படி பல நாடுகளின் போக்கு அமைந்ததற்கு கடந்த பத்து - பதினைந்து ஆண்டு நிகழ்வுகள் முக்கிய காரணிகளாக அமைந்தன.

1. திறந்த பொருளாதார கொள்கை.

பிற நாட்டினர் நம் மீது கவனத்தை திருப்ப முதற் காரணி. சிறுபான்மை அரசை வைத்துக்கொண்டு மன்மோகன் சிங் மூலம் புரட்சிக்கு வித்திட்ட நரசிம்ம ராவ் உண்மையில் நவீன இந்தியாவின் 'மௌன' சிற்பி.

2. கார்கில் சண்டை

கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட மாட்டோம் என்ற வாஜ்பாய் அரசின் (பொறுப்பு) விவேகமான முடிவு, அணு ஆயுத சோதனையால் விலகி இருந்த நாடுகளை நெருங்கி வரச் செய்தது. தயவு செய்து கார்கில் போர் என யாரும் சொல்லாதீர்கள். சண்டை என்ற அளவில் தான் நடந்தது.

3. பரவும் மத தீவிரவாதம்

ஒரு சில மன நோயாளிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் நீண்ட காலமாக அதன் வடுக்களைச் சுமந்து ஒலித்த இந்தியாவின் வலியை உணரச் செய்தது. இவன் நம் நண்பன் என நெருங்கச் செய்தது. பிந்த்ரன்வாலேயும், பின் லேடனும் ஒரே நிறை தான்; மதத் தீவிரவாதிகள் எனப் பொதுவில் அழைப்போம். தனிப்பட்ட மதத்தின் மாண்பைப் பேணுவோம்.

4. சீனாவின் எழுச்சி

காலத்துக்கேற்ற பொருளாதார கொள்கை மற்றும் தேர்ந்த உள் கட்டமைப்பு வசதி மூலம் உலக கவனத்தை வெகுவாக கவர்ந்த சீனா மேற்கு நாடுகளின் முதலீட்டை வாரிக் குவித்து வருகிறது. ஆனால் இது நிறைய ஊடல்களையும் சேர்த்தே வளர்த்தது.

1. அமெரிக்கா முதலிய நாடுகள் சீனாவின் ஆதிக்கம் சோவியத் யூனியன் இல்லாத ஆசியாவில் பரவுவதை விரும்ப வில்லை. மட்டுப் படுத்தும் முயற்சிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன.

சென்ற வாரத்தில் சீனாவில் இருந்து வந்த சிறுவர் விளையாட்டு பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் (Lead) கலந்திருப்பதாக கூறி முன்னணி அமெரிக்க நிறுவனம் பல நூறு கோடி மதிப்புள்ள பொம்மைகளை திருப்பி அனுப்பியது.

இந்த வாரம் சீனாவில் இருந்து வந்த சிறுவர் ஆடைகளில் நிறம் நிற்க பயன் படுத்தும் ஃபார்மால்டிஹைடு என்னும் வேதிப்பொருள் நிர்ணையிக்கப் பட்ட அளவை விட பல மடங்கு அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது ஆடைகள் எளிதில் தீப்பிடிக்க காரணியாக அமையும் என்பதால் திரும்பப் பெறுமாறு கூறியுள்ளது நியூசிலாந்து.

2. இரண்டாம் உலகப் போர் நினைவுகள் சீனா மற்றும் ஜப்பான் இடையே உரசலைத் தோற்றுவித்துள்ளன. ஜப்பான் தலைமை அந்நாட்டின் போர் வீரர்கள் நினைவிடத்துக்கு செல்வதை சீனாவும், தென் கொரியாவும் எதிர்க்கின்றன. அது உலகப் போர் குற்றவாளிகளின் புதைவிடம் என எள்ளுகின்றன. இதனால் ஜப்பானின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் அங்கு செல்கின்றனர். காரணம் இவ்விரு நாடுகளில் ஜப்பான் பெருமளவில் முதலீடு செய்திருப்பது தான். இது இரு நாட்டு மக்களிடையே கடும் கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜப்பான் பிற நாடுகளில் சந்தையைத் தேடி வருகிறது.

இந்த இடத்தில் அபே, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுடன் நின்ற இந்தியர்களை நினைவு கூர்ந்தததை கவனத்தில் கொள்க. மேலும், சந்தைப் பெருக்கத்துக்காக சீனர்களுக்கு பெரும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் மலேஷியாவிற்கும் சென்றுள்ளார் அபே.

எது எப்படியோ, தனக்கு சாதகமான பன்னாட்டு அரசியல் நிலையைப் லாவகமாக பயன்படுத்திக் கொள்ளுமா இந்தியா? இல்லை, தொடர் வண்டிக் கோட்டங்களையும், மண்டலங்களையும் யாருக்கும் பாதிப்பில்லாமல் அமைப்பதிலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் இடதுசாரிகளை சமாளிப்பதிலும் தன் நிர்வாக ஆற்றலை செலவிடுமா?

Sunday, August 19, 2007

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்....

இரு மாதங்களுக்கு முன் பள்ளிக்கூடம் படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். ஆனால் இந்த பதிவு படத்தைப் பற்றியது அல்ல. (இன்னும் படம் பார்க்கவில்லை) சில காட்சிகளே என்னை உலுக்க போதுமானதாக இருந்தது. உண்மையில் 'முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சரி'ன் தொடர்ச்சி அது.

என் பள்ளிகளையும், எனக்கு கற்றுவித்த ஆசிரியர்களையும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. ஆனால் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள். என்னை நினைவில் வைத்திருப்பார்களா? திடீரென்று எப்படி பார்ப்பது? திரைப்படத்தை எதிர்மறையாக உரைத்தவர்களிடம் ஒரு திரைப்படத்தின் உந்துதலால் வந்தேன் எனக்கூறினால் மலிவாக இருக்காதா?

பரிசு என்ன வாங்கிச் செல்வது? ஒருவேளை, பள்ளிக்கு நிதி வழங்க வேண்டுமோ? இல்லை, விரிவாக்கத் திட்டத்துக்கு உதவ வேண்டுமா? இன்னும் பல தத்துப்பித்தான கேள்விகள் ஓடின. இத்தனை தயக்கத்தையும் தாண்டி நினைவுகளை தேடிச் செல்வேனா? செடியை வளர்த்தவர்கள் முன் மரமாய் நிற்க ஏன் தயக்கம்? பதில் தெரியும். ஒப்புக்கொள்ளத்தான் தயக்கம். முதலில் நாளை எழுதுவதாக கூறி பாதியில் விட்ட பதிவுகளை நிறைவு செய்ய வேண்டும்.

உங்கள் நினைவுகளை மேலும் உரச செல்வேந்திரனையும் வாசியுங்கள்.