Tuesday, October 27, 2009

தனி குறும்படம் - பார்வை

முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி.

அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான்.

நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது.

இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொல்லுதுன்னு எடுத்துக்கலாம். அவ்வளவு தான். அவ்வளவு தான்னா அவ்வளவே தான். இதுக்கு மேல ஒண்ணும் பெருசா ஆராய்ச்சி பண்ணத் தோணலை (அசை போடும் போது).

சைதாப்பேட்டையில் இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் நண்பர்களுடன் குடி இருக்கிறீர்கள். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லப் பிடிக்கலை. நண்பர்கள் சென்று விட்ட பின்பு நீங்கள் உணரும் தனிமைன்னு பாத்தா பொருந்தும். குறும்படங்கள் அவற்றின் கால அளவில் (இந்தப் படம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியது) தான் சொல்ல வரும் கருத்தை இப்படித் தான் விவரிக்க முடியும். பெரும்படங்கள் பார்த்துப் பழகிய நமக்கு அவ்வளவு தானா படம் என்ற ஏமாற்றம் துவக்கத்தில் இருக்கலாம். ஆனால், புதுப்பாடல்/புதுமைச் சிறுகதைகளை ஓர்ந்து படித்தவர்களுக்கு இந்த உணர்வு போதுமானதாக இருக்கும்.

நுட்பங்கள்னு பாத்தா, காலைல காலதர்(சன்னல்) வழியா கதிர்கள் அழகா அறைக்குள்ள விரியும். தொம், தொம்னு ஓசை கேக்கும். உடனே புரண்டு அப்புறம் எழுந்திருப்பான். புறக்காரணிகள் தான் இப்படி எழுப்புதுங்கறது புரியும். அப்புறம் நடந்த உரையாடலில் அந்த ஓசை யாரோ துணி துவைக்கும் ஓசைன்னு விளங்குனாங்க.

அப்புறம் அந்தப் பெண், யாருன்னு தெரியாது. அவங்க பாட்டுக்கு கையைக் கட்டிட்டு நின்னு வெறிச்சுப் பாப்பாங்க. நாமளா என்ன வேணும்னா உணர்ந்துக்கலாம். அடுத்து அந்தப் பூனை. அது படுக்கைல இருந்து துள்ளி எழுந்து சுவரருகே போய் கத்துவது அவனது தனிமையின்/தனிமைப் படுத்தப் பட்டதின் வலிகளைச் சொல்லுவதா எடுத்துக்கலாம். அந்தப் பூனை டக்குன்னு தவ்வி காலதர்க் கண்ணாடிக் கதவுகள்ல ஏறித் திரும்பும். தப்பிக்க நினைக்கிற மனப்பான்மையா??? பாக்குறவங்களைப் பொறுத்தது.

ரொம்ப அளக்காமப் (யோசிக்காம) படம் பாத்தா எளிமைப் புரியுங்கறது தான் இந்தப் படம் எனக்கு சொல்லும் சேதியாப் படுது. இதே அணுகுமுறைல புதுப் பாதையில் (நவீனங்கள்) வரும் படைப்புகள் காட்டும் மெல்லிய உணர்வுகளை நுகர முடியும்னு நம்பறேன்.

Monday, October 26, 2009

இட ஒதுக்கீடு!

ஒதுக்கிய ஊரார் ஒதுக்கும் வழக்கம்
ஒதுக்கி ஒடுங்கியோ ருக்கென்(று) இடங்கள்
ஒதுக்கிய போதும் ஒதுங்கிட(ம்) இன்றி
ஒதுங்கும் நிலையை ஒறு.

"தனி" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)

கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார்.

திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.

பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் பார்த்தவர்கள் எப்படி வெவ்வேறு விதமாக அணுகினார்கள்னு புரியலை(அடுத்த பதிவுல என்னோட பார்வையச் சொல்றேன்).

இடையில் குறும்பட அடர்தட்டு விரும்புவோருக்காக 10 வெள்ளி நன்கொடை பெற்று வழங்கப்பட்டது. நூறு வட்டுகளாவது விற்றிருந்தால் தயாரிப்பாளர் கையை வலுப்படுத்தி இருக்கும். நானும் 5 வட்டுகள் பெற்றுக் கொண்டேன். வர முடியாதவர்களுக்காவும், ஊரில் கொண்டு போய் காட்டலாம்னு தான்.

பின்னர் நேரமின்மையால் மிகச்சுருக்கமான கலந்துரையாடல் செழியனுடன் நடந்தது. அதிலும் வழமையான கேள்விகள் தான். திரைப்படங்கள் ஆபாசமா இருக்கு, பாடல்கள் தரக்குறைவா இருக்கு.. இந்த மாதிரி. செழியன் 'படங்கள் வணிகம் சார்ந்தவை. நீங்க படங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்க. சில படங்களின் வெற்றியே நல்ல படங்களின் விழுக்காட்டைக் கூட்டும்'னு சொன்னார்.

பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.

அடுத்த கேள்வியா இதழ்கள்ல சிற்றிலக்கிய வகை இருக்கும் போது அப்படி வணிகம் சாராத படங்கள் வருவதைத் தடுத்தது எதுன்னு கேட்டார். செழியன், அப்படி ஒரு வெற்றிடம் இருப்பது உண்மை தானென்றும் இது போன்ற மாற்றுத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அந்த நிலையை மாற்றும்னு தான் நம்புவதாக்க் குறிப்பிட்டார்.

வழக்கம் போல் நூலக நிர்வாகம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன். உடன் வந்த பதிவர்களும் இந்த சேர்க்கை நல்லா இருக்கிறதா சொன்னாங்க! கூட்டம் முடித்து கிளம்பினோம். எங்கன்னு அடுத்த இடுகைல பாப்போம்.

Wednesday, October 21, 2009

சச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்

இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)

சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.

இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)

தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.

தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.

மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-)

பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.

இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.

Tuesday, October 20, 2009

சச்டி நோன்புச் சொற்பொழிவு - த.சிவகுமாரன் - குறவஞ்சிப் புதிர்

நேற்று முதல் சிங்கை சிலோன் சாலை செண்பக விநாயகர் கோவிலில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் கந்த புராண உரை சச்டிக்காக 6 நாள்கள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. முன்பும் கம்பவாருதி செயராசின் உரைகளைக் கேட்டுள்ளதால் ஆர்வத்தோடு சென்றேன். இம்முறை கோவில் வளாகத்திலேயே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கோவில் உள்ளே நுழையவும் உரை துவங்கவும் சரியாக இருந்தது. ஏடும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசினார்.

சச்டி நோன்பிருப்பவர்கள் இழந்ததைப் பெறுவார்கள் என்றும் தேவர்கள் அவ்வாறே அசுரர்களிடம் இழந்ததைப் பெற்றனர் என்று சொன்ன போது 'ஈழத்தில் இழந்ததையும் நோன்பினாலேயே பெற்றிருக்கலாமே'ன்னு ஒரு வறட்சியான எண்ணம் ஓடியது. கந்த புராண நூல் ஆறு காண்டங்களாக வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. காஞ்சி கச்சியப்பரால் எழுதப்பட்ட இந்நூல் தமிழர் சால்பை எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

வேதாந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறது. பரப்பிரும்மமே இறைவன் என்றும் சொல்கிறது. ஆனால் சித்தாந்தமோ கடவுள் உருவம் உடையவர் என்கிறது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களை கந்த புராணம் பரப்பிரும்மம் உருவெடுத்து கந்தனாக வந்தான் என்று தீர்ப்பதாகக் கூறினார்.

எந்த ஒரு பெரிய நூலும் விளக்க மற்றும் தொடர் நிலையில் துணை நூல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அவ்வகையில் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் கந்த புராணத்தின் அடிப்படையில் எழுந்ததாகவும் சொன்னார். குற்றாலக் குறவஞ்சியிலும் கந்த புராண நிகழ்வுகள் குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறி ஒரு பாடலை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.


மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி யொருகொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமுங்கொண் டார்சைவர் தாமுங்கொண் டார்தவப்
பேறா முனிவரு மேற்றுக்கொண் டாரிதைப்
பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே

குறத்தியைத் துணையாகக் கொண்ட குறவனொருவன் வேட்டைக்குப் போய் ஆறு நாட்கள் கழித்துக் கண்ட கொக்கை சட்டியில் குழம்பு வைத்தான். அந்த குழம்பிற்கு அந்தணரும், சைவர்களும் மற்றும் முனிவர்களும் 'எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும்'னு போட்டியிட்டார்கள்னு பொருள் வரும். இப்பாடலின் பொருள் பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம்.

இதன் பிறகு தான் ஆய வேண்டிய தகவல்கள் சொன்னர். சச்டி, அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்து ஆறுநாட்கள் கைக்கொள்ளப் படவேண்டும். ஆனால் பிரதமைக்கு முற்பகல் என்றும் குறிப்பு இருக்கிறது. பிரதமை ஞாயிறு பிற்பகலில் இருந்து திங்கள் காலை வரை இருக்கும். அப்படிப் பார்த்தால் திங்களன்று தான் சச்டி துவங்க வேண்டும். ஆனால் ஞாயிறன்றே திருச்செந்தூரில் தவறுதலாகத் துவங்கி விட்டார்கள்.

திருஞ்செந்தூரில் சூரன் கொல்லப் பட்டதால் அதையே முன்னோடியாகக் கொண்டு நிறைய இடங்களில் தவறாகத் துவங்கி இருக்கின்றனர். ஆறாம் நாளிலேயே நோன்பு முடிந்து விடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சூரனுடனான போர் திருச்செந்தூரில் நடைபெறவில்லை என்றும் ஈழத்தில் கதிர்காமம் அருகே இன்று விகாரையாக இருக்கும் சூரன் கோட்டைக்கு வெளியில் தான் சண்டை நடந்ததாகவும் சொன்னார். மகேந்திரபுரி இலங்கைக்குத் தெற்கே இருந்ததாகவும் சூரன் கொல்லப் பட்டபின் வீரபாகுவை அவ்வூரை கடலில் அமிழ்த்தச் சொல்லி விட்டதாகவும் கூறினார்.

கூட்டம் முடிந்து அங்கேயே உணவையும் (10 மணிக்குப் போய் யாரு சமைப்பா;-) முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன். இன்று இருளும் ஒளியும் என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.