Skip to main content

சச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்

இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)

சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.

இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா! வேற எந்தக் கடவுளின் ஆயுதங்களாலும் பெயர் வைப்பதிலை ஏன்னா இருள் இல்லாத மனிதனே இல்லை, அப்புறம் எப்படி இருள் கொண்ட வீட்டை இடிக்கும் ஆயுதத்தால் பெயர் வைப்பது :-)

தட்சன் என்பவன் இருள் நிறைந்த உள்ளம் கொண்ட பிரமனின் மகன். அவன் சிவனிடம் தன் மகளை மணமுடித்துக் கொள்ள வேண்டிய அருள் பெற்றவன். அவனின் மற்ற மகள்களை (27 பேர்) நிலாவுக்கு அனைவரையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள வேண்டும்னு மணமுடித்துக் கொடுத்தானாம். நிலாவோ இருவரிடம் மட்டும் அன்பாய் இருந்ததால் தட்சன் நிலவை தேய்ந்து அழிய திட்டி விட்டான். நொந்து போய் சிவனிடம் பணிந்த நிலவை வளரும் படி அருள் தந்ததினால் வளர்ந்து, தேய்கிறதாம் நிலா! இந்தக் கதை எதுக்குன்னா மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளா விட்டால் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்ற நீதியை உணர்த்தவாம். அப்படின்னா, 27 பேரை மணந்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. பேச்சாளர் நாம் சடங்குகளை, கதைகளை அதன் பொருள் தெரியாது பின் பற்றுகிறோம்னு வருத்தப் பட்டார்.

தட்சன் பிரமனிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். உலகில் பெரியது எது? பெரியவர் யார்? பிறருக்கு பயன் தரும் வகையில் ஈட்டும் செல்வம் பெரியது, அத்தகைய செல்வம் உடையவர்கள் பெரியவர் என்றாராம் பிரம்மா. நல்ல சிந்தனையாகப் பட்டது. இதனுடன் அவர் சொன்ன இன்னொரு விளக்கம் தலைப்புக்குப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் பட்டது.

மால், அயன் இருவரில் பெரியவர் யார்னு தெரிஞ்சிக்கிறதுக்காக சிவன் இருவரையும் அடிமுடி கண்டு வரப் பணித்தார் இல்லையா? பிரமனின் நாவில் இருப்பவள் கல்விக் கடவுள். இந்தக் கல்வி அறிவின் துணையோடு பிரமனால் சிவனின் முடியைக் காண முடியவில்லை. கல்வி வெறுமனே குறுக்கு வழியைத் தான் காட்டியது :-)

பெருமாளோ செல்வக் கடவுளை நெஞ்சில் நிறுத்தியவர். அவரால் செல்வத்தின் துணையோடு அடியைக் காண முடியவில்லை, குறுக்கு வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த இருவரும் தம்மில் பெரியவர் யார் என்ற அகந்தை இருள் கொண்டதால் கல்வியும், செல்வமும் துணை செய்யவில்லை. அந்த இருளை அகற்றும் விளக்காக, ஓங்கி உயர்ந்தான் ஒளிப் பிழம்பாக அண்ணாமலை. அந்த ஒளி இருவரின் இருளையும் அகற்ற உதவியது. உடன் தாள் பணிந்தார்கள்.

இன்னொரு தகவலும் சொன்னார். இறைவனைக் காண நாமெல்லாம் கோவிலுக்குப் போறோம், இறைவன் மூன்று விதங்களில் கோவிலை விட்டு நம்மைத் தேடி வருவார். வேட்டைக்குப் போதல், சப்பரத்தில் வலம் வருதல், தேர் ஊர்வலம். இதில் சப்பரம் என்பது சக கோபுரம்னு சொன்னார். அதனால் தான் சப்பரம் கோவில் கோபுரத்தின் உயரத்துக்கு இணையாக இருக்கணுமாம். இப்பப் புரியுதா ஏன் கோபுரம் ரொம்ப உயரமா வைக்கிறதில்லைனு :-) கைலாச எல்லை விரிவடைஞ்சாலும் தூக்கிட்டுப் போக வலு வேணுமே!! இந்தத் தேர் கருவறை உயரத்துக்கு இருக்கணுமாம். ஏன் இந்த மாதிரின்னு யாராவது விளக்குங்க. இன்றைய சொற்பொழிவு பிடித்தே இருந்தது.

Comments

வாவ்...அப்படியே சொற்பொழிவு கேட்ட மாதிரியே இருக்கு..அருமையான தொகுப்பு முகவையாரே :-)
கொழுவல் என்ற சண்டையைக் குறிக்கும் சொல்லைப் பற்றியும் குறிப்பிட மறந்து விட்டேன். கொழுவல் என்பது வளைந்த கம்பைக் குறிக்கும். இரண்டு கொழுவல் கம்புகள் ஒன்றோடு ஒன்று கோர்த்தால் கொழுவல் தான். ஏதாவது ஒரு கொழுவல் நிமிர்ந்தால், விட்டுக் கொடுத்தால் அடுத்த கம்பு கொழுவிக் கொழுவி கொழுவல் தீர்ந்து தானும் நிமிர்ந்து விடும்.

இந்தச் சொல்லை எந்த அகராதியிலும் காணவில்லை. தமிழ்ச்சொற்களையே தொகுக்காமல் பிற மொழிகளில் கடன் வாங்குவது கொடுமை.

நேற்று அவரோடு தனிமையில் உரையாடினோமே :-) வருகைக்கு நன்றி.

Popular posts from this blog

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் …

யார் வள்ளல்?

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.

இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!

எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம்…

விசயம்

தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.

இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.

மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.

புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க?
மாற்று: என்ன வேலையா வந்தீங்க?

புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.
மாற்று: சொல்…