Saturday, September 20, 2008

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே

சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள்.

கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு
பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல்
இழந்த இளவல் எனவகைப் பட்டார்
அழுந்தும் கடிவாளம் காண்.

கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி

இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல்

உறுவல் அழுந்த ஒருவன் இளவல்
மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக
முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத்
தறுக உணர்ந்தாள் தனித்து.

தறுக - தவறாக

ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள்
'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல்
கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத்
தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'.

அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல்

இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன
சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள்
தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில்
வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து.

விளர்தல் - வெளுத்தல், வெட்குதல்

சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர்

'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம்
உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச்
சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட
கட்டறுந்த கண்கள் கசிந்து.

வேறாரு மில்லா வெறுமையால் தன்குரல்
வீறிட்(டு) அழுதாள்; விசும்பினாள் காறலுற.
ஏதில் ஒலிசார்ந்(து) இரிந்தனர் கான்துறவோர்
பேதை இருந்த இடத்து.

ஏதில் – அந்நியமான
இரிதல் - விரைதல்

அழுதவர் யாரென்(று) அறிந்தநன் நோலார்
குழுமினர் வால்மிகிமுன்; ஒட்பச் செழுமையால்
யாவையும் ஊகித் தறிந்துரைத்தார் பேருயிராள்
தேவைகள் பார்க்கப் பணித்து.

ஒட்பம் - அறிவாற்றல்
பேருயிராள் - ஒன்றுக்கு மேற்பட்ட உயிர் சுமந்தவள் (இரட்டை கரு என்பது அறியப் படாததால் ஈருயிர் (அ) மூவுயிர் எனக் குறிக்கவில்லை)

இரட்டையர் பிறப்பு

பொறுக்காத போதும் பொறையெனும் பண்பு
துறக்காமை தாய்வழி யுற்ற சிறப்பெனினும்
அத்தன்மை ஏற்கா(து) அவள்வயி(று) ஈன்றதே
முத்தனைய வித்துகளி ரண்டு.

புல்லால் களைந்தார் புரைகளை, சேயுள்மேற்
புல்மே வியமே னியனிலவன் - புல்லடி
ஓடிய செல்வன் குசனென்றார் வால்மீகி,
சூடிய மாலைகள் தொட்டு.

இரண்டாவது அடி பதம் பிரித்து
புல் மேவிய மேனியன் இலவன்
அடிப்புல் – புல்லடி

நித்தில மைந்தர் இருவரும் கற்றனர்
வித்தைகள் யாவையும் வெட்புடன் - அத்திறம்
காட்டி அவையை அசைத்த சிறுவர்தாம்
காட்டிற் பிறந்த கரும்பு.

முந்தைய பகுதி

Friday, September 19, 2008

அலைபேசி உலவிகளும் தமிழும்

நண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை.

இணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா? உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும்.

இதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்?

சிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா? ஆம் என்றால் மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியே! அலைபேசியில் தமிழ் மென்பொருள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Monday, September 15, 2008

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே

எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன்
புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த
கோமகன் மக்கள் குறையற ஆண்டனன்
தாமரைப் பூமக ளோடு.

கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில்
பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை
ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய்
நன்னிலஞ் செல்ல நசிந்து.

குசை - மகிழ்ச்சி
கோவில் - அரண்மனை

கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள்
எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை
ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான்
வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று.

அத்தம் - காடு

என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை
பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள்
சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார்
மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு.

சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும்
நிறையிலை என்பார் இருக்க - பொறையறு
மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால்
குன்றில் உருண்டதாம் கல்.

இரியல் - விரைந்து, நிலை தடுமாறி

தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம்
மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப்
பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே
பணிந்தான் இளவல் பழிக்கு.

பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில்
அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான்,
சுணங்கினான் சோர்வாய்; ஒருமையில் ஆழ்ந்தான்,
முணங்கும் மனம்வழி ஒத்து.

முணங்கு - முணு, முணுத்தல்

ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்
சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து
சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்
உம்பலாம் தோள்களும் சோர்ந்து.

உம்பல் - வலிமையுடைய, எழுச்சி மிகுந்து

முந்தைய பகுதி      அடுத்த பகுதி