Saturday, September 20, 2008

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே

சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள்.

கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு
பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல்
இழந்த இளவல் எனவகைப் பட்டார்
அழுந்தும் கடிவாளம் காண்.

கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி

இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல்

உறுவல் அழுந்த ஒருவன் இளவல்
மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக
முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத்
தறுக உணர்ந்தாள் தனித்து.

தறுக - தவறாக

ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள்
'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல்
கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத்
தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'.

அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல்

இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன
சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள்
தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில்
வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து.

விளர்தல் - வெளுத்தல், வெட்குதல்

சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர்

'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம்
உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச்
சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட
கட்டறுந்த கண்கள் கசிந்து.

வேறாரு மில்லா வெறுமையால் தன்குரல்
வீறிட்(டு) அழுதாள்; விசும்பினாள் காறலுற.
ஏதில் ஒலிசார்ந்(து) இரிந்தனர் கான்துறவோர்
பேதை இருந்த இடத்து.

ஏதில் – அந்நியமான
இரிதல் - விரைதல்

அழுதவர் யாரென்(று) அறிந்தநன் நோலார்
குழுமினர் வால்மிகிமுன்; ஒட்பச் செழுமையால்
யாவையும் ஊகித் தறிந்துரைத்தார் பேருயிராள்
தேவைகள் பார்க்கப் பணித்து.

ஒட்பம் - அறிவாற்றல்
பேருயிராள் - ஒன்றுக்கு மேற்பட்ட உயிர் சுமந்தவள் (இரட்டை கரு என்பது அறியப் படாததால் ஈருயிர் (அ) மூவுயிர் எனக் குறிக்கவில்லை)

இரட்டையர் பிறப்பு

பொறுக்காத போதும் பொறையெனும் பண்பு
துறக்காமை தாய்வழி யுற்ற சிறப்பெனினும்
அத்தன்மை ஏற்கா(து) அவள்வயி(று) ஈன்றதே
முத்தனைய வித்துகளி ரண்டு.

புல்லால் களைந்தார் புரைகளை, சேயுள்மேற்
புல்மே வியமே னியனிலவன் - புல்லடி
ஓடிய செல்வன் குசனென்றார் வால்மீகி,
சூடிய மாலைகள் தொட்டு.

இரண்டாவது அடி பதம் பிரித்து
புல் மேவிய மேனியன் இலவன்
அடிப்புல் – புல்லடி

நித்தில மைந்தர் இருவரும் கற்றனர்
வித்தைகள் யாவையும் வெட்புடன் - அத்திறம்
காட்டி அவையை அசைத்த சிறுவர்தாம்
காட்டிற் பிறந்த கரும்பு.

முந்தைய பகுதி

3 comments:

said...

'தந்தே திரும்பலாம்' - இவ்விடத்தி ஏகாரத்தின் முன் ஒற்று மிகாது.

தடுமாறிப் பொர்தன்னில் -இவ்விடம் ஒற்று மிகும்.

இரட்டைக் கரு -ஒற்று மிகும்.

வெண்பாக்கள் ஒவ்வொன்றும் அருமை. சில இடங்களில் வியக்க வைக்கிறீர்கள். உவமைநயங்கள் அருமை. அருமை. வாழ்த்துகள்.

said...

அருமை இராம்!


வாழ்த்துகள்!!

said...

யாருக்கும் தெரியாம ஒளிஞ்சிருந்த என்னோட வலைப்பூவை கண்டுபுடிச்சிட்டீங்களா :-))
வருகைக்கு நன்றி, பாரதி.