Skip to main content

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே

எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன்
புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த
கோமகன் மக்கள் குறையற ஆண்டனன்
தாமரைப் பூமக ளோடு.

கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில்
பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை
ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய்
நன்னிலஞ் செல்ல நசிந்து.

குசை - மகிழ்ச்சி
கோவில் - அரண்மனை

கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள்
எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை
ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான்
வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று.

அத்தம் - காடு

என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை
பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள்
சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார்
மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு.

சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும்
நிறையிலை என்பார் இருக்க - பொறையறு
மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால்
குன்றில் உருண்டதாம் கல்.

இரியல் - விரைந்து, நிலை தடுமாறி

தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம்
மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப்
பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே
பணிந்தான் இளவல் பழிக்கு.

பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில்
அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான்,
சுணங்கினான் சோர்வாய்; ஒருமையில் ஆழ்ந்தான்,
முணங்கும் மனம்வழி ஒத்து.

முணங்கு - முணு, முணுத்தல்

ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்
சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து
சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்
உம்பலாம் தோள்களும் சோர்ந்து.

உம்பல் - வலிமையுடைய, எழுச்சி மிகுந்து

முந்தைய பகுதி      அடுத்த பகுதி

Comments

////ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்
சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து
சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்
உம்பலாம் தோள்களும் சோர்ந்து.////

அருமை அருமை வாழ்த்துகள். வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துகள். அருமையிலும் அருமை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!
Tamilparks said…
அருமை வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் …

யார் வள்ளல்?

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.

இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!

எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம்…

விசயம்

தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.

இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.

மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.

புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க?
மாற்று: என்ன வேலையா வந்தீங்க?

புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.
மாற்று: சொல்…