Tuesday, August 5, 2008

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் !

இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது.

தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டோம்.

காலத்திற்கொவ்வாத தனித்தமிழ் முயற்சிகளினால் என்ன பயன் என்று அரசு வினவினார். எனக்குப் பொறுக்க வில்லை. நாம இப்படி கூடுவதால் மட்டும் என்ன பயன் என்று கடுப்படித்தேன். உண்மையில் தனித் தமிழ் முயற்சிகளின் தேவை மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய, வரலாற்றுடன் பிணைந்த பொருள். இப்படி ஒரு வட்ட பண்டப்பேழையில் (மேசை) அமர்ந்து கொண்டு என்னத்த பேசுவது என்று விட்டு விட்டேன். பார்க்கலாம், அரசுவுடன் இந்த தலைப்பில் அமராது விடுவது இல்லை. இப்பத் தான் அமுதாவும் கூட இருக்காரே, நல்ல நாளாப் பாத்து கட்டம் கட்டிடலாம்.

அடுத்ததும் அரசு குறித்த துணுக்குத் தான். மிக நேரந்தாழ்த்தி, ஆகக் கடைசியாத் தான் வந்தாப்ல. இவருக்குன்னு வச்சிருந்த அல்வால பாதிய எறும்புங்க சாப்பிட்டுருச்சு. வந்து உக்காந்ததும், ஜெகதீசன் 'மிச்சத்தை யெல்லாம் இவருக்கு குடுங்க'னு போண்டாவையும், அல்வாவையும் குடுத்ததும் முகம் தொங்கிப் போச்சு. 'இல்லைங்க, உங்களுக்குன்னு எடுத்து வைச்சது'ன்னு சொன்னதும் மனசைத் தேத்தி சாப்பிட்டாரு.

போன தடவை ஜெகதீசன் பேசலைன்னு கரிச்சுக் கொட்டினா, இந்தத் தடவை கோவியும், கிரியும் வாயைத் திறக்கவே இல்லை. ஜெகதீசன் பேசினார், அவ்வளவு தான். மற்ற பதிவர்கள் அனைவரும் மடை திறந்தாற் போல் பேசினார்கள். (இப்போதைக்கு) வாசகர் பாஸ்கர் காட்டிய ஆர்வம் வியப்பளித்தது. அவரிடமிருந்து துறை சார்ந்த பதிவுகள் நிறைய எதிர் பார்க்கலாம். பதிவாரா? வடுவூர் குமார், கடைசி முறையாக சிங்கைப் பதிவர் கூட்டத்தில் கலந்து கொள்வதாகச் சொன்னார். அவருடைய எதிர்காலப் பணிகள், முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள். சிங்கை நாதன் வழக்கம் போல எங்களுக்கு அல்வாவும், பாஸ்கருக்கு புதிரும் தந்தார். என்னமோ பக்கத்து வீட்டுல இருந்து எட்டிப் பாத்தவர் மாதிரி பாஸ்கரைப் பத்தி ஒவ்வொரு தகவலா சொல்லி அவரைத் திகைக்க வைச்சார்.

ஏற்கெனவே, மூணு ஜோ இருக்கறது கண்ணைக் கட்டுது. இப்ப இன்னொரு 'ஜோ'சப் வர்றாரு. மீண்டும் கூடுவதற்கு காரணம் இருக்குல்ல.... மகிழ்ச்சி தான். வாங்கையா, வாங்க. அடுத்த முறை இடத்தேர்வு செந்தில் நாதன் முறை. அவர் புகிட் கோம்பாக் என்ற இடத்தில் கூடலாம்னு சொன்னார். அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்.