Skip to main content

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் !

இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது.

தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டோம்.

காலத்திற்கொவ்வாத தனித்தமிழ் முயற்சிகளினால் என்ன பயன் என்று அரசு வினவினார். எனக்குப் பொறுக்க வில்லை. நாம இப்படி கூடுவதால் மட்டும் என்ன பயன் என்று கடுப்படித்தேன். உண்மையில் தனித் தமிழ் முயற்சிகளின் தேவை மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய, வரலாற்றுடன் பிணைந்த பொருள். இப்படி ஒரு வட்ட பண்டப்பேழையில் (மேசை) அமர்ந்து கொண்டு என்னத்த பேசுவது என்று விட்டு விட்டேன். பார்க்கலாம், அரசுவுடன் இந்த தலைப்பில் அமராது விடுவது இல்லை. இப்பத் தான் அமுதாவும் கூட இருக்காரே, நல்ல நாளாப் பாத்து கட்டம் கட்டிடலாம்.

அடுத்ததும் அரசு குறித்த துணுக்குத் தான். மிக நேரந்தாழ்த்தி, ஆகக் கடைசியாத் தான் வந்தாப்ல. இவருக்குன்னு வச்சிருந்த அல்வால பாதிய எறும்புங்க சாப்பிட்டுருச்சு. வந்து உக்காந்ததும், ஜெகதீசன் 'மிச்சத்தை யெல்லாம் இவருக்கு குடுங்க'னு போண்டாவையும், அல்வாவையும் குடுத்ததும் முகம் தொங்கிப் போச்சு. 'இல்லைங்க, உங்களுக்குன்னு எடுத்து வைச்சது'ன்னு சொன்னதும் மனசைத் தேத்தி சாப்பிட்டாரு.

போன தடவை ஜெகதீசன் பேசலைன்னு கரிச்சுக் கொட்டினா, இந்தத் தடவை கோவியும், கிரியும் வாயைத் திறக்கவே இல்லை. ஜெகதீசன் பேசினார், அவ்வளவு தான். மற்ற பதிவர்கள் அனைவரும் மடை திறந்தாற் போல் பேசினார்கள். (இப்போதைக்கு) வாசகர் பாஸ்கர் காட்டிய ஆர்வம் வியப்பளித்தது. அவரிடமிருந்து துறை சார்ந்த பதிவுகள் நிறைய எதிர் பார்க்கலாம். பதிவாரா? வடுவூர் குமார், கடைசி முறையாக சிங்கைப் பதிவர் கூட்டத்தில் கலந்து கொள்வதாகச் சொன்னார். அவருடைய எதிர்காலப் பணிகள், முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள். சிங்கை நாதன் வழக்கம் போல எங்களுக்கு அல்வாவும், பாஸ்கருக்கு புதிரும் தந்தார். என்னமோ பக்கத்து வீட்டுல இருந்து எட்டிப் பாத்தவர் மாதிரி பாஸ்கரைப் பத்தி ஒவ்வொரு தகவலா சொல்லி அவரைத் திகைக்க வைச்சார்.

ஏற்கெனவே, மூணு ஜோ இருக்கறது கண்ணைக் கட்டுது. இப்ப இன்னொரு 'ஜோ'சப் வர்றாரு. மீண்டும் கூடுவதற்கு காரணம் இருக்குல்ல.... மகிழ்ச்சி தான். வாங்கையா, வாங்க. அடுத்த முறை இடத்தேர்வு செந்தில் நாதன் முறை. அவர் புகிட் கோம்பாக் என்ற இடத்தில் கூடலாம்னு சொன்னார். அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்.

Comments

கிரி said…
//இப்பத் தான் அமுதாவும் கூட இருக்காரே, நல்ல நாளாப் பாத்து கட்டம் கட்டிடலாம்//

சபாஷ் சரியான போட்டி

//'இல்லைங்க, உங்களுக்குன்னு எடுத்து வைச்சது'ன்னு சொன்னதும் மனசைத் தேத்தி சாப்பிட்டாரு.//

பாரி அரசு உண்மையாகவே எடுத்து வைத்தது தான்.

//இந்தத் தடவை கோவியும், கிரியும் வாயைத் திறக்கவே இல்லை//

:-)))) இது ரொம்ப அநியாயம் அண்ட புளுகு ..

எல்லோரும் ஒரு பதிவு போட்டாச்சுன்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி
ஜோ/Joe said…
// மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டோம்.//

அடுத்த சந்திப்பில் இது பற்றி விரிவாகவே விவாதித்து விடலாம் தோழரே!
அடுத்த தடவ நானும் வந்திடறேண்ணே...
அய்யய்யோ....மறந்துட்டேன்...மீ த பஷ்ட்ட்டூ !!! ஹிஹிஹி!! (கலந்துக்காதவங்களும் சொல்லலாம்ல!!!)
//தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் //

நல்ல கருத்து, இஸ்லாத்தில் இதற்கு எந்த தடையும் இல்லை. முஸ்லிம்கள் தங்கள் சொந்த மொழிகளில் பெயர் சூட்டுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இந்தோனேசியாவில் இது குறைவு ஆனால் துருக்கி மற்றும் ருஷ்ய குடியரசு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் மொழிகளிலேயே பெயர் வைத்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் இது மிக குறைவு. தமிழில் முரன்படாத பெர்களை வைத்தக் கொள்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நன்றி
முகவைத்தமிழன்
www.tamilmuslimmedia.com
www.tmpolitics.net/reader
//
காலத்திற்கொவ்வாத தனித்தமிழ் முயற்சிகளினால் என்ன பயன் என்று அரசு வினவினார்.
//

அய்யா! எப்ப இந்த மாதிரி கேட்டேன்?

ஏன்னய்யா இல்லாதையெல்லாம் இட்டுக்கட்டி எழுதுகிறீர்கள்! :(

அகரம்.அமுதாவிடம் நான் கேட்ட கேள்வி நீங்கள் தீவிர இலக்கியத்தின் வாயிலாக அடைய நினைக்கும் இலக்கு?

அதற்கு அவர் இலக்கென்று எதுவும் கிடையாது! என்றார்!

அப்புறம் அகரம்.அமுதா வின் உழைப்பை உணர்ந்திருப்பதால் அவரை பேச வைக்க வேண்டும் என்று குண்டக்க மண்டக்க எதையே கேட்டு வைத்தேன்...

உடனே வள்ளுவத்தில் ஆரம்பித்து கம்பன்,பாரதி என்று விளித்து... பார்ப்பானியம்... என்று போயிட்டிருந்தார்...

ஓரிடத்தில் தமிழ் இலக்கியங்கள் திருடப்பட்டு சமஸ்கிருத்ததில் உலவுகின்றன.. அவை நம்முடையது! அதை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்...

அப்பதான் வேதகாலத்தின் சூழலைப்பற்றியும்.. அப்ப எவ்வளவு மக்கள் இருந்திருப்பார்கள்... இப்ப எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்றும்...

இந்த மீட்டெடுப்பு வாயிலாக நீங்கள் செய்ய நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்...

அங்கே தான் குறுக்கே புகுந்து நீங்கள் குட்டைய குழப்பினீர்கள்...

அவ்வளவுதான்...
அடுத்தமுறை கையில ஒலிபதிவு கருவியோட வரணும் போலிருக்கு! :)

திரிபுகள் மிகுந்த சமூகமய்யா...:)
வந்துட்டேன்.

சிறந்த பதிவு. நான் பிறந்து 45 நாள்ல எனக்கு பெயர் வைச்சுட்டாங்க.
எனக்கு மட்டும் விவரம் தெரிஞ்சுருந்துச்சுன்னா, சின்ன பெயர வைங்கன்னாவது சொல்லியிருப்பேன். இவ்ளோ பெரிய பெயர வைச்சுக்கிட்டு அதை எழுதுறதுக்குள்ள நான் படுறபாடு எனக்குத்தான் தெரியும். த‌மிழ் பெய‌ர் வைக்க‌ணும்கிற‌துல‌ என‌க்கும் உட‌ன்பாடு இருக்கு. அடுத்த‌ த‌லைமுறையில‌ இதை ந‌டைமுறைப‌டுத்தலாம்.
//
காலத்திற்கொவ்வாத தனித்தமிழ் முயற்சிகளினால் என்ன பயன் என்று அரசு வினவினார்.
//
பாரி.அரசு தனித்தமிழுக்கு எதிரானவர் அல்ல. அகரம் அமுதாவைப் பேசவைப்பதற்காகவே அந்த வினாவை அரசு எழுப்பினார்...
:)
@கிரி
//இது ரொம்ப அநியாயம் அண்ட புளுகு//

என்ன கிரி, நீங்களும் கோவியண்ணனும் போன கூட்டத்தை விட ரொம்பவும் அடக்கி வாசிச்சீங்களா இல்லையா?

@ஜோ, விஜய் ஆனந்த்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@முகவைத் தமிழன்
அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் பின்னூட்டம் மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது. நன்றி.
@ பாரி அரசு
இந்த இடுகையின் நோக்கமே நீங்கள் பட்டியலிட்ட குறிப்புகளை(யும்) பொது தளத்தில் வைப்பதற்கான முயற்சி மட்டுமே.

//அவரை பேச வைக்க வேண்டும் என்று குண்டக்க மண்டக்க எதையே கேட்டு வைத்தேன்//

அவரைப் பேசவைக்கத் தான் என்பதை நான் நன்கறிவேன். நீங்க குண்டக்க, மண்டக்க கேட்டதில்
//அங்கே தான் குறுக்கே புகுந்து நீங்கள் குட்டைய குழப்பினீர்கள்//

தப்பே இல்லை ;-)

//அடுத்தமுறை கையில ஒலிபதிவு கருவியோட வரணும் போலிருக்கு//

ஆக அதிகமான ஐயப்பாடு! எதற்காக ஐயா நம்மை நாமே நமக்குள் நிறுவ வேண்டும். நீங்கள் தந்த விளக்கமும் மற்றவர்களுக்கு என்ற வகையில் தான் வெளியிட்டேன். நான் அறியாதவரா, நீங்கள்?

@ஜெகதீசன்
வழி மொழிகிறேன். அந்த விவாதம் மேடைக்கு வரணும்ல. ஆனால், நீங்க குறிப்பிட்ட மாதிரி தனித் தமிழை அரசு எதிர்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு இருந்தால் வருந்துகிறேன்.
@அரசு
மறக்காம அந்த குறிப்புகளைத் தொகுத்து மேம்படுத்தி ஒரு இடுகை போடுங்க. 'முன்னுரை' மாதிரி இருந்தாலும் கொள்ளலாம்(பரவாயில்லை), எழுதுங்க.

அந்த ஒலிஇப்பதிவுக் கருவியை இடுத்த தடவைக் கொண்டு வாங்க எனக்குப் பயனுள்ளதா அமையும்;-)
தனித்தமிழ், தூயத்தமிழ், சுத்ததமிழ்

என்ன கொடுமையய்யா! கொடுமை!!

ஏன்னப்பா இப்படி கொல்கிறீர்கள்?
// முகவை மைந்தன் said...
ஜோ, விஜய் ஆனந்த்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி //

அண்ணா, என்னாதிது???நன்றியெல்லாம்??? என்ன மறந்துட்டீங்களா?? சிந்தாதிரிப்பேட்ட எனக்கு நல்லா ஞாபகமிருக்குங்கண்ணோவ்!!!!!

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி