Tuesday, October 20, 2009

சச்டி நோன்புச் சொற்பொழிவு - த.சிவகுமாரன் - குறவஞ்சிப் புதிர்

நேற்று முதல் சிங்கை சிலோன் சாலை செண்பக விநாயகர் கோவிலில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் கந்த புராண உரை சச்டிக்காக 6 நாள்கள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. முன்பும் கம்பவாருதி செயராசின் உரைகளைக் கேட்டுள்ளதால் ஆர்வத்தோடு சென்றேன். இம்முறை கோவில் வளாகத்திலேயே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கோவில் உள்ளே நுழையவும் உரை துவங்கவும் சரியாக இருந்தது. ஏடும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசினார்.

சச்டி நோன்பிருப்பவர்கள் இழந்ததைப் பெறுவார்கள் என்றும் தேவர்கள் அவ்வாறே அசுரர்களிடம் இழந்ததைப் பெற்றனர் என்று சொன்ன போது 'ஈழத்தில் இழந்ததையும் நோன்பினாலேயே பெற்றிருக்கலாமே'ன்னு ஒரு வறட்சியான எண்ணம் ஓடியது. கந்த புராண நூல் ஆறு காண்டங்களாக வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. காஞ்சி கச்சியப்பரால் எழுதப்பட்ட இந்நூல் தமிழர் சால்பை எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

வேதாந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறது. பரப்பிரும்மமே இறைவன் என்றும் சொல்கிறது. ஆனால் சித்தாந்தமோ கடவுள் உருவம் உடையவர் என்கிறது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களை கந்த புராணம் பரப்பிரும்மம் உருவெடுத்து கந்தனாக வந்தான் என்று தீர்ப்பதாகக் கூறினார்.

எந்த ஒரு பெரிய நூலும் விளக்க மற்றும் தொடர் நிலையில் துணை நூல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அவ்வகையில் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் கந்த புராணத்தின் அடிப்படையில் எழுந்ததாகவும் சொன்னார். குற்றாலக் குறவஞ்சியிலும் கந்த புராண நிகழ்வுகள் குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறி ஒரு பாடலை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.


மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி யொருகொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமுங்கொண் டார்சைவர் தாமுங்கொண் டார்தவப்
பேறா முனிவரு மேற்றுக்கொண் டாரிதைப்
பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே

குறத்தியைத் துணையாகக் கொண்ட குறவனொருவன் வேட்டைக்குப் போய் ஆறு நாட்கள் கழித்துக் கண்ட கொக்கை சட்டியில் குழம்பு வைத்தான். அந்த குழம்பிற்கு அந்தணரும், சைவர்களும் மற்றும் முனிவர்களும் 'எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும்'னு போட்டியிட்டார்கள்னு பொருள் வரும். இப்பாடலின் பொருள் பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம்.

இதன் பிறகு தான் ஆய வேண்டிய தகவல்கள் சொன்னர். சச்டி, அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்து ஆறுநாட்கள் கைக்கொள்ளப் படவேண்டும். ஆனால் பிரதமைக்கு முற்பகல் என்றும் குறிப்பு இருக்கிறது. பிரதமை ஞாயிறு பிற்பகலில் இருந்து திங்கள் காலை வரை இருக்கும். அப்படிப் பார்த்தால் திங்களன்று தான் சச்டி துவங்க வேண்டும். ஆனால் ஞாயிறன்றே திருச்செந்தூரில் தவறுதலாகத் துவங்கி விட்டார்கள்.

திருஞ்செந்தூரில் சூரன் கொல்லப் பட்டதால் அதையே முன்னோடியாகக் கொண்டு நிறைய இடங்களில் தவறாகத் துவங்கி இருக்கின்றனர். ஆறாம் நாளிலேயே நோன்பு முடிந்து விடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சூரனுடனான போர் திருச்செந்தூரில் நடைபெறவில்லை என்றும் ஈழத்தில் கதிர்காமம் அருகே இன்று விகாரையாக இருக்கும் சூரன் கோட்டைக்கு வெளியில் தான் சண்டை நடந்ததாகவும் சொன்னார். மகேந்திரபுரி இலங்கைக்குத் தெற்கே இருந்ததாகவும் சூரன் கொல்லப் பட்டபின் வீரபாகுவை அவ்வூரை கடலில் அமிழ்த்தச் சொல்லி விட்டதாகவும் கூறினார்.

கூட்டம் முடிந்து அங்கேயே உணவையும் (10 மணிக்குப் போய் யாரு சமைப்பா;-) முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன். இன்று இருளும் ஒளியும் என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.

2 comments:

said...

:-) 6 நாளும் போகிறீர்களா..? சொற்பொழிவு எனக்கு யாழ்ப்பாண நினைவுகளை மீட்டுத்தருகின்றது..

said...

//10 மணிக்குப் போய் யாரு சமைப்//

மாப்பிளை அந்த அளவுக்கு போய்டியா, நீ நல்ல சாப்பாடு சாப்புடுற.. ஹும்