Skip to main content

தசாவதாரம் - பார்க்கலாம்!

'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன்பு இவ்வாறு குழம்ப நேர்ந்ததில்லை.

பாட்டி கமலிடம் நுண்ணுயிர்க்குப்பி மாட்டுவதில் இருந்து துவங்குகிறது இழுவை.... கதைக்கு தொடர்பே இல்லாமல் கலிஃபுல்லாவும், பூவராகவனும் வருகிறார்கள். எப்படா, இந்த குழப்பம் முடியும்னு ஆகிப் போச்சு. அதுவும் கலிஃபுல்லா பேசுவது எளிதில் விளங்கவில்லை. பூவராகவன் அஞ்சல் பெட்டி 520 சிவாஜியை நினைவுபடுத்துகிறார்.

ஜப்பானிய கமலைக் காட்டும் போதே இறுதிக் காட்சி இவருக்கும், ஃபிளட்சருக்கும் தான் என ஊகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த சண்டைக் காட்சி அருமையாக இருந்தது. தோல்வியடைந்து, சாகும் தருவாயில் ஹாலிவுட் பாணியில் 'என் சாவை உன்னால் தீர்மானிக்க முடியாது' என்று ஃபிளட்சர் குப்பியை கடிக்கும் போது அந்த கதைஉருவின் மேல் சற்று மதிப்பு ஏற்படுகிறது.

அசரடிக்கும் உழைப்பு. வியக்க வைக்கும் தொழில் நுட்பம். ஆனால் அவை எவ்வகையிலும் தரத்திற்கு உதவவில்லை. நெருக்கமான காட்சிகளில் கண்களை ஒட்டி இருக்கும் ஒப்பனை ஒட்டப் பட்டதாகவே தெரிகிறது. இயல்பான மாந்தர்களுடன் ஒப்பனை புனையப்பட்டவர் வரும்போது ஒப்பனையின் 'அழகு' தெள்ளெனத் தெரிகிறது. (நாயுடு ஒப்பனை மட்டும் செம்மையாக இருக்கிறது.) வரைந்து இணைக்கப் பட்ட காட்சிகள் (graphics), மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட தரம் என்றாலும் உயர் தரம் என்று ஒப்புவதற்கில்லை. வரதராஜரை கடலில் போடுவது, சுனாமியில் சிதறுண்ட களம் இவையெல்லாம் கடும் உழைப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றன. அதுவே அவற்றின் குறையாகவும் அமைந்து விடுகிறது. இறுதிக் காட்சியில் புஷ் மேடையில் இடம் வலமாக நடப்பது, கே. எஸ். ரவிக்குமாரின் கவுண்டமணி நடனம்... சரி, சரி அதெல்லாம் ரசிகர்களுக்கான தூவல், கண்டு கொள்ள வேண்டியதில்லை.

எல்லா தோற்றங்களுக்கும் ஏற்றவாறு திறம்பட உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார் உலக நாயகன். அவரைப் பாராட்டி வேண்டுமானால் தனிப் பதிவு போடலாம். கமலின் ஒப்பனைத் தோற்றங்களைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் NaCl க்குக்கூட பயன்படுத்தவில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப கமலையே பார்த்து அலுத்துச் சலித்துப் போகிறோம்.

தரம், உலகத் தரம்னு எல்லாம் படிச்சுட்டு போனது தான் தப்பு. மத்த படி படம் ஒரு முறை பார்க்கலாம் வகை.

Comments

Sriram said…
நல்ல விமரிசனம். சார்பற்ற முறையில் இருந்தது. நான் கண்டிப்பாகப் பார்ப்பேன், ஆனால் குறைந்த எதிர்பார்ப்புகளோடு.
நல்ல விமர்சனம்.
Bleachingpowder said…
//'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை//

எனக்கு படம் முடிந்த போதுதான் வந்தது :-).

அதுவும் துப்பாக்கி குண்டு அவ்தார் சிங் உடம்பில் புகுந்து கேன்சரை வெளியே எடுத்து சென்றதாக டாக்டர் சொல்லுவாரே அட அட அட உலக நாயகன் உலக நாயகன் தான்.

ரொம்ப எதிர்பார்பை நம்மிடத்தில் உருவாக்கி ஏமாற்றிய படம் என்றவகையில் தான் எனக்கு இந்த படத்தில் மேல் கோபம். மற்றபடி சிவாஜியை போல் இதுவும் நல்ல பொழுதுபோக்கு படம் அவ்வளவுதான்
முகவை,

தரமான விமர்சனம்.....!
ஸ்ரீராம் வருகைக்கு நன்றி! உங்க பார்வையும் பதிங்க, அவசியம் படிக்கிறேன்.

மனதின் ஓசை, உங்க விமர்சனத்தையும் படிச்சிட்டேன், பின்னூட்டமும் போட்டுட்டேன்.

ப்ளீச்சிங் பௌடர், உங்க ஏமாற்றத்தைப் புரிஞ்சுக்க முடியுது.

//சிவாஜியை போல் இதுவும் நல்ல பொழுதுபோக்கு படம் அவ்வளவுதான்//

வழிமொழிகிறேன்.

வாங்க, கோவி அண்ணா. பாராட்டுக்கு நன்றி. இன்னும் பல மிச்சமிருக்கு. அடுதடுத்த இடுகைகள்ல வாங்கிக்கிறேன் ;-)

Popular posts from this blog

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் …

யார் வள்ளல்?

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.

இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!

எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம்…

விசயம்

தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.

இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.

மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.

புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க?
மாற்று: என்ன வேலையா வந்தீங்க?

புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.
மாற்று: சொல்…