Wednesday, June 25, 2008

எறும்புடன் ஒரு பயணம் - புனைவு

இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது.

நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும்.

இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.

அப்போது தான் அந்த எறும்பைக் கவனித்தேன். என் சாப்பாட்டுப் பையின் மேல் ஒரு கடி எறும்பு (சிவப்பா இருக்குமே அது தான்) ஊர்ந்து கொண்டிருந்தது. இது எப்படி இங்கே? பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது தொத்திக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பேருந்தில் விட்டால் யார் காலிலாவது பட்டு நசுங்கி விடும். பையின் விளிம்புக்கு வரும் போதெல்லாம், அதைப் பிடித்து மீண்டும் நடுவில் விட்டு கண்காணித்துக் கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய நிறுத்ததில் ஏதாவது செடியின் மேல் விட்டு விடலாம் என்று முடிவு.

இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இப்படித் தொடர முடியலை. விரலில் ஏறிய எறும்பு விரலசைவில் தன் சமநிலை தவறி காற்றில் மெல்ல அசைந்து இருக்கைக்கும், பேருந்தின் உட்புறச்சுவருக்கும் இடையே தன் கைகளை பிடிமானத்துக்காக விசிறியவாறு விழுந்தது. அது கைகளை விசிறிய போது அப்படியே மெதுவாக உருமாறி என் பெப்போவைப் போல் தெரிந்தது. 'அய்யோ, என்ன செய்வேன்' என்று பதறி ஒரு நொடியில் கீழே விழுந்த பெப்போவைத் (அதாங்க, எறும்பு) தேடலானேன். பக்கத்தில் அமர்ந்திருந்த சீனப் பெண் 'என்னாச்சு, இவனுக்கு' என்பது போல் பார்த்தார். அசடு வழிந்த நான் இருக்கையில் அமர்ந்த படி கால்களை அகட்டிக் கொண்டும், பையை நகர்த்திக் கொண்டுமிருந்தேன். கடுப்பாகி, அந்தப்பெண் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டார்.

எல்லோரும் என்னைப் பார்த்த போதும், இப்போது கொஞ்சம் வசதியாய் இருக்கவே நன்றாக குனிந்து தேடினேன். அகப்பட்டுக் கொண்டது. மகிழ்ச்சியுடன் கையில் எடுத்து உத்துப் பார்த்தேன். ஏதாவது அடி பட்டிருக்கப் போவுது. உற்றுக் கவனித்ததில் அது பெப்போ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். நிறுத்தம் வந்தவுடன் அந்த எறும்பை அங்கிருந்த மதில் சுவர் செடியில் விட்டு, விட்டு 'அப்பாடா'ன்னு சாலையைக் கடந்து தொடர் வண்டி நடை மேடைக்கு வந்தேன். எல்லாம் போன ஞாயிறு 'honey, I shrunk the kids' சன் தொலைக்காட்சியில் பார்த்ததால் வந்த உள்ளக் குளறல். எப்படியோ ஒரு எறும்பை காப்பாத்தி இருக்கேன். :-)

10 comments:

said...

நல்லா கவனிச்சீங்களா முகவை! உங்க மனைவி கட்டுச்சோற்றைத் தந்தாங்களா? கட்டுச்சாப்பாட்டையா? அந்த சீனப்பெண் உங்களைத் திட்டாமலா போனாங்க? ஏதோ சிங்கைங்கிறதால தப்பிச்சீங்க. நம்ம ஊராயிருந்தா நடத்துனர் உங்களைப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டிருப்பாரு. உங்க நல்ல மனசுக்கென் பாராட்டுக்கள். அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்களுக்காவது தோனிற்றே. நீங்க பேருந்தைவிட்டு இறங்கி அங்கிருந்த மதிலில் எறும்பை விடும்போது அது உங்கள்ட ஒண்ணு சொல்லிச்சே அதஏன் சொல்ல மறந்தீங்க. 'ஏன் இப்படி வேலைக்குத் தாமதமா போற? என்னமாரி சுறுசுறுப்பா இரு அப்டின்னு சொல்லுச்சா இல்லியா?'

said...

:-))))

பாவம். அதை வேற பேட்டையில் கொண்டு விட்டீங்க? இனி எப்படித் தன் குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்?

அதோட மனைவி, அதோட பெப்பா எல்லாம் அப்பாவைத் தேடி அழமாட்டாங்களா?

இதுக்குத்தான் 'குடும்பப் பாட்டு' ஒன்னு வச்சுக்கணும்!

said...

எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?
:)

said...

@அமுதா
//உங்க மனைவி கட்டுச்சோற்றைத் தந்தாங்களா? கட்டுச்சாப்பாட்டையா?//

எலுமிச்சைசாதம், தயிர்சாதம், புளியோதரை, இவற்றைத் தானே கட்டுச்சோறுன்னு சொல்லுவோம்? சாம்பார்/புளிக்குழம்பு ஊத்தி பிசைஞ்சு தர்றத கட்டுச் சாப்பாடுன்னு தானே சொல்லணும்.

இது பாதி உண்மை, பாதி புனைவு. அதனால மத்த கருத்துக்களை அப்படியே விட்டுடறேன்.

@துளசி கோபால்,
புன்னகைக்கு நன்றி.
//பாவம். அதை வேற பேட்டையில் கொண்டு விட்டீங்க? இனி எப்படித் தன் குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்?

அதோட மனைவி, அதோட பெப்பா எல்லாம் அப்பாவைத் தேடி அழமாட்டாங்களா?//

ஆமால்ல, பாவம் அதோட குடும்பம்.

//இதுக்குத்தான் 'குடும்பப் பாட்டு' ஒன்னு வச்சுக்கணும்!//

சரி விடுங்க, இந்நேரம் குடும்பப் பாட்டைப் பாடி ஒண்ணு சேந்துருப்பாங்கன்னு நினைச்சுக்குவோம்.

@கோவி
//எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?//

ம்ஹூம், எவ்வளவு யோசிச்சு(!) சிங்கப்பூர் காலை வாழ்க்கைய ஒரு புனைவா குடுத்தா கேக்குற கேள்வியைப் பாருங்க!

said...

கோவி.கண்ணன் said...
எறும்பைக் காப்பாற்றியாச்சு...பாராட்டுக்கள்...வயத்துக்குள்ள போன / போக இருக்கிற சிக்கன் ?
:)
repeat!!!!!!!
anbudan aruna

said...

:-)))) :-))))

இந்த பின்னூட்டம் ஜெகதீசன் அவர்களுக்கும் சேர்த்து ;-)

said...

:-)

said...

திரும்பக் கேட்கும் அருணா மற்றம் புன்னகை பூத்த கிரி, மனதின் ஓசை வரவிற்கு நன்றி.

@அருணா, 50க்கு வாழ்த்துகள்.

@கிரி, 50 குறைவா பின்னூட்டம் வாங்கறது இல்ல போல;-) ஜேக் பேரைச் சொல்லி நீங்களும் புன்னகையோட கிளம்பிட்டீங்க. வாழ்க!

said...

//@கிரி, 50 குறைவா பின்னூட்டம் வாங்கறது இல்ல போல;-) //

இதெல்லாம் எப்போது வேண்டும் என்றாலும் 5 கூட வராமல் போகலாம்..நான் எழுதுவதை எப்போதும் போல் தொடர்கிறேன்.

//ஜேக் பேரைச் சொல்லி நீங்களும் புன்னகையோட கிளம்பிட்டீங்க.//

ஜெகதீசனை அவர்களை தான் இப்படி சொன்னீங்களா ..நான் குழம்பி விட்டேன்..உண்மையாகவே..:-))

உங்க பதிவுக்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியல கோவி கண்ணன் பின்னூட்டம் பார்த்து.. அதனால் வேற வழி இல்லாமல் இப்படி செய்தேன்..

said...

உங்களுக்கு எறும்பு ச்சீய்.. கரும்பு மனசு.