Skip to main content

சுனைப்பூ சூடியவள் - மீள்நிகழ்வு

என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள்.

ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை.

இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு.

ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு.

பிரிவுன்னா அப்படித் தான்.

ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு.

மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை

அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன்.

தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்தான். நான் தனியா தண்ணிக்குள்ள நின்னது வியப்பு அவனுக்கு.

யாரும் கூட வரலை?

ரொம்பத் தான் ஆசைன்னு நினைச்சுக்கிட்டு, பூப்பறிக்க வந்தேன்னு சொன்னேன்.

சுனைலயா பூப்பறிகிறன்னு கிண்டலாச் சிரிச்சான்.

ம், இந்தா மிதந்து வருதுல்ல அந்தப் பூக்களை எடுத்து மாலை கட்டுவேன்னு சொன்னேன்.

அதுல மணமிருக்காதேன்னு கேட்டான்.

பூ செடிக்குச் சொந்தம். பறிக்கிறது அத்துமீறல் தானே என்று அவனை ஆழமாப் பாத்தேன்.

அவன் பார்வை கீழ போயிருச்சு. அந்த நேரம் குமரியும் வந்துட்டா. அவள்ட்டயும் பேசிட்டு என்னைப் பார்த்தமேனிக்கு கிளம்பிப் போய்ட்டான். பூப்பறிக்க சுனைக்கு வந்ததா நான் சொன்னதை நம்பிட்டானோ!ன்னு இருந்தது.

===========================================

ம், உதிர்ந்து சுனைல விழுந்த பூவை இந்தப் பூவை சூடத் தொடுத்ததா அவன் நம்புனான்னா ரொம்பவே உன்ட்ட மயங்கிட்டான்னு தான் பொருள். வேற என்ன கதை வைச்சிருக்க.

சொல்றேன்.

மீள்நிகழ்வு - புனக்கிளி கடிந்தவள்

மற்றொரு நாள் புனக்காட்டில் இருந்தேன். கேப்பை - கேழ்வரகு போட்டிருந்தோம். புனம்ன்றது சிறுன்ற பொருள் தரும். புனக்காடுன்னா சிறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்ட நிலம். மலைச்சரிவுல நீண்ட பரப்புடைய நிலமா அமைக்க முடியாது. தவிர, சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவதாலும் அது புனக்காடு. சிறுதானியத்தைப் புன்செய்ப் பயிர்கள்ன்னும் சொல்லுவோம். அந்தக் காட்டுல மேய்ற பறவைகள் குருவிகளும் கிளிகளும் தான். குருவிகள் சின்னதா இருக்கதால புனக்கிளின்னு சொல்றமா, இல்ல புனக்காட்டில் மேயும் கிளிகளை புனக்கிளின்னு சொல்றமான்னு யாருக்கும் தெரியாது. பொதுப்பெயர்

தொலைவுல நாடன் வர்றதைப் பாத்துட்டேன். அவங்க காட்டுக்குப் போறோன் போல. அவனை எப்படிக் கூப்பிடுறது? கவண் வில் எறியலாமா? பாத்துட்டு குருவி விரட்டுறதா நெனைச்சிட்டுப் போயிட்டான்னா? திடீர்ன்னு ஏய், சூ, ஓ, ஆ, அய்யோன்னு கத்துனேன். அவனுக்குக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். நான் எம்பி எம்பிக் கத்தி அளப்பறையக் கூட்டுனேன். ஓடி வந்தான். ஏன் இப்படிக் கத்துறன்னான். நான் எங்கக் கத்துனேன். கிளி விரட்டுனேன்னேன். அதான் கவண் வில் இருக்குல்ல. அதுல கல் ஏத்தி அடிக்க வேண்டியது தானேன்னு பரண் நிழலுக்கு வந்த படி கேட்டான். நானும் உக்காந்துட்டேன். கிளிக்கு அடிபடாதா? கூட்டுல காத்திருக்க குஞ்சுகளுக்கு யார் ஈடு வைக்கிறதுன்னு பார்வையை வேறுபுறம் திருப்பியவாறு கேட்டேன். சரியாப் போச்சு, இந்தப் பட்டம் கேப்பை வீட்டுக்கு வந்த மாதிரி தான் என்றான். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அவன்ட்ட பேசும் போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறகு அவங்க காட்டுக்குப் போய்ட்டான்.

====================================

நீ ரொம்பவே விவரந்தான். கூப்பிடணும் ஆனா அவனா வந்த மாதிரி இருக்கணும்ன்னு திட்டம் போட்டு செயல்பட்ருக்க.

இப்ப அவன் என்னைப் பத்தித் தான் கவலைப்பட்டுக்கிட்டு இருப்பான். அவன் பெருமூச்சு என் கூந்தலை அளையிற மாதிரி கிட்டத்துல உணர்றேன்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்

புனக்கிளி கடியும் பூங்கண் பேதை

தான்அறிந் தனளோ இலளோ பானாள்

பள்ளி யானையின் உயிர்த்தென்

உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!

Comments

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி