Skip to main content

சுனைப்பூ சூடியவள் - பாணாள் பள்ளி யானை உயிர்த்து

வணக்கம் டாக்டர் எப்படி இருக்கீங்க?

நான் நல்லா இருக்கேன். இதே மாதிரி எங்க போனாலும் முகமூடி போட்டிக்கிட்டு போங்க. அடிக்கடி கைகளைக் கழுவுங்க. வீட்ல எல்லாரும் நலமா?

நலம். கரோனானால மூச்சுத் திணறல் ஏன் டாக்டர் வருது?

கரோனா கிருமி உள்ள நுழைஞ்சதும் அதைக் கொல்றதுக்காக தற்காப்புத் துறை தன் படைகளை அனுப்பும். அதுல கீட்டோன்சும் உண்டு. மற்ற படைகளால் வெல்ல முடியாதப்ப கீட்டோன்ஸ் கிருமியை சுத்தி வளைச்சு வெடிச்சிருங்க. தற்கொலைப் படை. இந்த வெடிப்புல நுரையீரல் செல்களும் பாதிக்கப் படும். இதே மாதிரி ஒவ்வொரு கிருமியாக் கொல்லும் போது நுரையீரல் பெருவாரியா பாதிக்கப் பட்டிருக்கும். இதனால நுரையீரலால மூச்சுச்சுற்றை முடிக்க முடியாம திணறல் வருது.

இந்த மூச்சுச் சுற்றை விளக்குங்களேன்?

பள்ளிக் கூடத்துல படிச்சது மறந்து போச்சா? (சிரிக்கிறார்) மூச்சும் இதயமும் ஒருங்கிணைந்து செயல்படணும். உடம்புல உள்ள செல்கள்ல ஆற்றல் எரிப்பு தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஆக்சிஜன் வேணும். குருதி தான் ஆக்சிஜனை சுமந்து செல்லும். ஆக்சிஜனை குருதில ஏத்தி விடுறது நுரையீரலின் முதல் சுற்று. இந்தக் குருதியை இதயம் உடல் முழுக்க நல்ல அழுத்ததுல அனுப்பி விடும். செல்கள் எரிக்கிற வேலையைச் செய்யும் போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும். இது திரும்ப குருதில தொத்திக்கிட்டு நுரையீரலுக்கு வரும். நுரையீரல் கார்பன் -டை- ஆக்சைடை பிரிச்சு எடுத்துக்கும் பிறகு ஆக்சிஜனை ஏத்தி விடும்.

இது மாதிரி எத்தனை சுற்று ஒரு நிமிடத்துக்கு?

உடல் அளவைப் பொறுத்து மாறும்.

ஏன் அப்படி?

இதயம் ஒரு தடவை துடிக்கும் போது உடல் முழுக்க ஆக்கிஜன் போய்ச் சேரணும். குழந்தைகளுக்கு உடல் அளவு சிறியதுங்கிறதால விரைவா ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைட் சுற்று முடிஞ்சிரும். அதனால இதயத் துடிப்பும் அதிகமா இருக்கும், மூச்சும் கூடுதலா எடுத்து விடுவாங்க.

அப்ப எலிக்கு இதயத் துடிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்.

ஆமா, யானைக்கு ரொம்பக் குறைவு. அவ்வளவு பெரிய உடம்பு முழுக்க ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனைக் குடுத்துட்டு வரணும் இல்லையா?

ஓ, நம்மளோட உறுப்புகள் எல்லாத்துக்கும் இருக்கக்கூடிய ஒரே வெளிஉலகத் தொடர்பு இந்தக் காற்று தான் இல்லையா?

ஆமாம், காற்றை ஒரு ஊடகமா நினைச்சுக்கிட்டம்னா மூச்சு விடு தூதுன்னு பாட்டு எழுதிரலாம்.

அதேதான் டாக்டர். என் மூச்சில் கலந்தவளேன்னு சொல்றதுக்கு வலுவான அடிப்படை இருக்குறதா உணர்றேன். அப்பப் பெருமூச்சு?

மன மயக்கம் ஏற்படும் போது ஆழ்ந்த சிந்தனையில் எண்ண ஓட்டத்திற்கு ஈடு தர முடியாமல் நுரையீரல் செயல்பாடுகள்ல சீர்மை குன்றும். அப்ப இரண்டு மூன்று மூச்சுகள் ஒண்ணு சேர்ந்துரும். இதுக்கு மேல சேர்த்து வைக்க முடியாதுன்னு அங்கங்க இடர் குறிப்போசை (அபாயமணி) அடிக்க நுரையீரல் முழு வேகத்துல காற்றை வெளிய அனுப்பும். இந்த மூச்சு இயல்பை விட ரொம்பவே நீளமானது. அதான் பெருமூச்சுங்கிறோம்.

மூச்சை ஊடகமாச் சொன்னீங்கள்ல அப்படின்னா பெருமூச்சு ஒரு செல் விடாம எல்லா செல்கள்ட்ட இருந்தும் தகவலைப் பெற்று கோர்த்து மொத்தமா வெளியிடும் நடைமுறைன்னு வைச்சுக்கலாமா?

ம், தாராளமா. நினைவுகள் தான் இந்தப் பெருமூச்சைத் தூண்டுதுன்னு வைச்சுக்கிட்டா காதலன் காதலி குறித்த உடல், மனம் இணைந்து வெளிப்படுத்தும் ஏக்கம் தான் பெருமூச்சு.

நீங்க சொன்னதை அப்படியே கபிலர் குறிப்பிட்டிருக்கார் டாக்டர்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தான்அறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்தென்
உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!

பிற உயிர் வருந்துவதைத் தாங்காத பேதைப் பெண்ணின் கணவன் பொருள் தேடி வெளியூர் போயிருக்கான். அங்க அவள் நினைவுகள் அவனை வாட்டுகின்றன. தான் வாடுவதை அறிந்தால் அவளும் வாடுவாளே அதனால் தன் வருத்தம் அவளுக்குத் தெரிந்து விடக் கூடாதுன்னு பெருமூச்சு விடுகிறான். அந்தப் பெருமூச்சை நள்ளிரவில் உறங்கும் யானை விடும் மூச்சின் வேகத்துக்கும் அளவுக்கும் ஒப்புமை வைக்கிறார் கபிலர். அந்த வேகமும் அளவும் தான் அவள் குறித்த எண்ணங்களின் பரிமாணம். செம்மை!

என்னால நம்பவே முடியலை. இன்னிக்கு இருக்குற அறிவியல்ல வளர்ச்சில நான் சொன்னது பள்ளிப் பாடம் தான். இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னால இவ்வளவு துல்லியமா எண்ணங்களை மூச்சோடு பொருத்தி அதற்கு யானை குறைவாக விடும் அளவில் நெடிய மூச்சை ஒப்புமை படுத்துனதை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. அருமை!

Comments

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி