Skip to main content

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன்.

இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க.

அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரிந்து கொள்வதற்காக) உரை எழுதும் பணியில் இருந்தோம். வெண்பாவின் வீச்சும், செப்பலோசையின் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. நண்பர்கள் குழுமத்தில் அவ்வப்போது வெண்பா எழுதி துன்புறுத்தியது உண்டு. இப்பொழுது அகரம் அமுதாவின் வெண்பாப் பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன். இப்படி பிறரின் தொடர்ந்த ஊக்கமும் என்னை இன்னும் முயற்சிக்கவே தூண்டியது.

படிச்சா மட்டும் போதுமா? திறம் அறிய வேண்டாமா? இதோ, கீதா சாம்பசிவம் அவர்களின் இராமாயணத் தொடரை அதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன். வாழ்த்தும், முதல் இடுகையும் வெண்பாவில் எழுதி பின்னூட்டி விட்டேன். அதில் சில அடிப்படைப் பிழைகள். ஆசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டினார். இந்த தொடரில் அவர் பின்னூட்டத்தில் வெளிப்படுவார் என நம்புகிறேன். கீதாம்மாவின் ஒவ்வொரு இடுகையையும் வெண்பாவால் தொடரவே இந்தத் தொடர். இசைவு தெரிவித்த அவருக்கு என் சிறப்பான நன்றிகள் பல.

பிழைகளைப் பொறுத்து, திருத்துமாறும் கேட்டுக் கொண்டு, அவருக்கு எழுதிய வாழ்த்துடன் தொடரைத் துவக்குகிறேன்.

பொதுவாய் எழுதும் பதிவில் இராமன்
மெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்
திடினும் உசாத்துணை என்றே எழுதத்
துடிக்கும் உமக்கேஎன் வாழ்த்து!

Comments

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகவை மைந்தன்.

ஜூரோங் பறவைப்பூங்கா மாதங்கி எழுதிய கவிதை, அதை வெளியிட்ட இதழ் யுகமாயினி. இரண்டும் வேறு வேறு
குழந்தை இலக்கியம்ன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டேன்
வருகைக்கு நன்றி மாதங்கி. இடுகை குறித்தும் ஏதாவது சொல்லிட்டு போகலாம்ல ;-) (இந்த பின்னூட்டத்தை அவங்க பதிவில போடணுமோ *!~#$)
ரவி said…
இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....
வாங்க ரவி. இராமாயணம் தமிழரால் எழுதப் பட்ட கதை இல்லை. அவர்களுக்கு தென் பகுதி காட்டில் வாழ்ந்த குரங்குகளைத் தாண்டிச் சிந்திக்க முடியலையோ என்னவோ. ஜாம்பவான் ஒரு கரடி!

முன்பு அரசுத் துறை வண்டிகளின் ஊர்வலம் மாவட்டங்களின் அகர வரிசைப்படி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் முதலில் வந்தது. நிருபர்கள், அமைச்சர் தமிழ்குடிமகனிடம் 'உங்கள் மாவட்டம் முதலில் வரணும்னுங்கிறது தானே உங்கள் நோக்கம்?'னு கேட்டாங்க. அமைச்சர் 'எனக்கு தமிழ் முதலில் வரணும், அய்யா' என்றார். இந்த மறுமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

நான் ஆயத்தமாத் தான் இருக்கேன். வேணும்னா, இராவண காவியத்தை வலையில் பிரிச்சு வேயலாம், வாங்க.
//பொதுவாய் எழுதும் பதிவில் இராமன்
மெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்
திடினும் உசாத்துணை என்றே எழுதத்
துடிக்கும் உமக்கேஎன் வாழ்த்து! //

கலக்கலாக இருக்கு.
முதுவை மைந்தன் அவர்களுக்கென் வணக்கங்கள். தங்கள் கட்டுரையில் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தைக் குறிப்பிட்டு எழுதியதற்கு என் பணிவுடன் கூடிய நன்றிகள். கட்டுரையை வாசித்தேன். வெண்பாவும் அருமை. தளைதட்டவில்லை எனினும் சொற்கள் இயல்பாக வந்துவிழவில்லை. சொற்களில் கவனம் தேவை. வாழ்த்துக்கள்
Anonymous said…
கீதா சாம்பசிவன் வளைக்குச்சென்று தங்களின் வெண்பாக்களைப் பார்த்தேன். வெண்பாக்கள் அருமை. ஓரிரு இடங்களில் தளை தட்டுகிறது.

இங்கனம் இல்வாழ்வு துறந்து -இதை இங்கனம்இல் வாழ்வு துறந்து- என்று பிரித்தெழுதினால் தளை தட்டாது.

இனியவர் யாருளர் இங்கு? -இனிவரும் -இதில் இங்கு இனிவரும் என்பதைப் புணர்ந்தால் இங்கினிவரும் என்றாகும் ஆதலால் தளை தட்டும். எனவே

இனியவர் யாருளர் இங்கே? -இனிவரும் -என்றெழுதினால் தளை தட்டாது.

நீங்கள் எழுதியுள்ள வெண்பாக்கள் யாவும் இயற்சீர் வெண்டளையான் இயன்றது ஆதலால் இவ்வெண்பா தூங்கிசைச் செப்பலோசை வகையாகும்.

வெண்சீர் வெண்டளையான் இயன்ற வெண்பாக்கள் துள்ளிசைச் செப்பலோசை ஆகும்.

இயற்சீர் வெண்சீர் இரண்டாலும் இயன்றுவரும் வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலோசையாகும்.

agramamutha
வருகைக்கு நன்றி. இலக்கணம் மீறாமல் எழுத முடிகிறது. இயல்பான சொற்களுக்கு என்ன செய்வது? என்னைப் பொறுத்த வரை முடிந்தளவு தமிழில் எழுதவும் பேசவும் விழைகிறேன். வெண்பாவில் கருத்தைச் சொல்வதா, கவிதையைச் சொல்வதா (வராததை எப்படிச் சொல்றது ;-)?

கரையில் நின்று நீச்சல் கற்க முடியாது என்பதை அறிவேன். இப்படி தொப்புனு விழுந்தம்னா ஒரு மாதிரி கரையேரலாம்னு எழுதத் துவங்கிட்டேன். இந்தத் தொடரை படித்து தயங்காமல் தட்டுங்கள். தேறுகிறேனா பார்ப்போம். குறைந்தது உங்கள் பதிவில் இது குறித்து எழுதினால் பட்டறையாகக் கொள்வேனே!
ரவி said…
இராமாயணம் என்றால் தீட்டுப்பட்டது போல் தமிழர்கள் ஒதுங்க வேண்டும்...

அப்போது தான் நமது கலையை, கலாச்சாரத்தை அழிக்க முயன்ற ஆரியக்கொட்டம் ஆறும்...

தமிழ் அரசனாகிய இராவண காவியத்தை நீங்கள் மேய்ந்தால் தன்யனாவேன்...

நானும் ரெண்டு வெண்பாவுக்கு ட்ரை பண்றேன்...
உங்கள் தொடர் ஊக்குவிப்பிற்கு நன்றி, அகரம்.அமுதா. தளைகள் தட்டுவது மற்றும் மேம்படுத்துதல் கருதி, அங்கே சுட்டி கொடுத்து, என் வலையில் தனிப் பதிவாய் இடலாம்னு இருக்கேன்.

//
இனியவர் யாருளர் இங்கு? -இனிவரும் -இதில் இங்கு இனிவரும் என்பதைப் புணர்ந்தால் இங்கினிவரும் என்றாகும் ஆதலால் தளை தட்டும். எனவே

இனியவர் யாருளர் இங்கே? -இனிவரும் -என்றெழுதினால் தளை தட்டாது.
//

புணருதலால் தளை தட்டுவது குறித்து இப்போது தான் கேள்விப் படுகிறேன். ('இல்லாட்டாலும் ரொம்பத் தெரியுமாக்கும்' -மனச்சான்று)

வெண்பா வகைகள் குறித்த விளக்கமும் அருமை. புத்துணர்ச்சியாய் இருக்கிறது. இன்று, நாளை கதை குறித்த வெண்பாக்களை வெளியிடுகிறேன்.
முகவை மைந்தன் அவர்களே! தங்களின் பின்னூட்டங்களைக் கண்டேன். நான் சுட்டிக் காட்டியதைத் தாங்கள் எங்கே தவறாக நினைத்துக்கொள்வீர்களோ? என்று நினைத்தேன். நல்லவேளை தாங்கள் அப்படி நினைக்க வில்லை. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். உங்களைப் போலத்தான் நானும் ஆரம்பத்தில் மிகமிகத் தவறுகள் வரும். தளைகள் தட்டாமல் எழுதினாலும் பொருட்செறிவிருக்காது. நிறைய வெண்பாக்களைப் படித்து மொழியோட்டத்தை அறிந்து கொண்ட பிறகு இப்பொழுது மிக விரைவாக வெண்பா எழுத முடிகிறது. (பொருட்செறிவோடு எழுதுகிறேனாஎன்பதை பிறர்தான் சொல்ல வேண்டும்) முயலுங்கள். உடன் நானிருக்கிறேன். கவலைவேண்டாம்.
Anonymous said…
'முன்பு அரசுத் துறை வண்டிகளின் ஊர்வலம் மாவட்டங்களின் அகர வரிசைப்படி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் முதலில் வந்தது. நிருபர்கள், அமைச்சர் தமிழ்குடிமகனிடம் 'உங்கள் மாவட்டம் முதலில் வரணும்னுங்கிறது தானே உங்கள் நோக்கம்?'னு கேட்டாங்க. அமைச்சர் 'எனக்கு தமிழ் முதலில் வரணும், அய்யா' என்றார். இந்த மறுமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?//


தமிழ்குடிமகன் தமிழை முன்வைத்தார்.

நீங்கள் எதை முன்வைக்கிறிர்கள்?

உங்கள் தமிழ் புலமையைக் காட்ட இராமாயணமா? இல்லை, இராமாயணத்தை சொல்லவா?

அப்புலமையைக் காட்ட ஒரு தமிழ்க்கதைக் கிட்டவில்லையா?
செந்தழல் ரவி said...
இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....

பொன்மானின் பின்போனப் பொய்யனவன் பூங்கதையைத்
தன்மானச் சிங்கமிவன் சாடிவிட்டான்; -என்மானச்
சிந்தையின் நேருற்ற செந்தழால்! என்னுடன்வா!
செம்புலப்பெ யல்நீர்போல் சேர்ந்து!
@அகரம்.அமுதா
சுடச் சுட வெண்பாவா இருக்கு! கலக்கல்.
///அகரம்.அமுதா
சுடச் சுட வெண்பாவா இருக்கு! கலக்கல்.////



இப்போழ்தென் கெட்ட(து)? உமக்குமோர் நல்வெண்பா
தப்பாமல் நான்செய்தே சாத்துகிறேன்! -இப்போழ்(து)
அகமேவெண் பாவெழுத ஆர்க்கும்நல் வேளை;
முகவைமைந் தா!முன் மொழி!
நண்பரே!
இன்றைக்குத் தான் இப்பதிவு என் கண்ணில் பட்டது.

கட்டுரையில் என்பெயரையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.

ஆனால், ஆரம்பப் பாடங்களைப் படிக்கும்படி நான் உங்களிடம் கோரியது நொந்து போயல்ல; தவறாக எண்ண வேண்டாம்
முறையாகச் சிறப்பாகச் செய்வீர்கள் என்பதால் தான்.

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.