Tuesday, July 10, 2007

உலக அதிசயங்கள் - பகுதி 2 ஈஸ்டர் தீவுகள்

தென் பசிபிக் கடலில் இருக்கும் சற்றே விரிந்த கவட்டை (புரியாதவர்களுக்கு பூமராங்) வடிவிலான அந்தத் தீவில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். சிலி நாட்டுக்கு சொந்தமானது. இந்த சிறிய தீவில் என்ன சிறப்பு?

கடற்கரை முழுவதும் ஓரளவு சீரான இடைவெளியில் கடலை பார்த்தவாறு மார்பளவில் அமைந்திருக்கும் சிலைகள் தான். சற்றே நெருங்கினால் “விலகு, நான் எதிர்பார்த்திருப்பது வேறொருவரை” என்பது போல் இன்னும் வெறித்த பார்வை. நிழற்படத்தில் பார்த்தாலே 'ஊ'வென காதில் இரையும் காற்று. பொட்டல் காட்டின் நடுவே இருக்கும் குலசாமியை தனியே பார்க்க வந்த உணர்வு. யார் செய்த சிலைகள்? எப்படி இங்கே வந்தன?

இந்த தீவே எரிமலை சாம்பல் மேடுறுத்தி உருவானது என்கின்றனர் ஆய்வாளர்கள். இங்கு முதன் முதலில், சுமார் தற்காலம் (CE) 500 - 800 அல்லது 1000-1200 வாக்கில் ஹொட்டு மடுவா என்பவர் தன் கூட்டத்துடன் குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர் வழித்தோன்றல்கள் தங்களுக்காகவும், மூதாதையர் மற்றும் கடவுளர்களுக்காகவும் செய்த சிலைகள் இவை. மேலும் கப்பல்களில் வரும் எதிரிகளை அச்சுறுத்த இப்படி பிரமாண்ட சிலைகளை வைத்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 500 முதல் 700 கிலோ எடை கொண்டவை. இவற்றை அருகிலுள்ள குன்றை குடைந்து, சிலையாக வடித்து பின்னர் அங்கிருந்து கடற்கரைக்கு 'உருட்டி' வந்துள்ளனர். ஆம், அம்மக்கள் கயிறு மற்றும் கம்புருளைகளை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த சிலைகள் பார்ப்பதற்கு மார்பளவு எனத் தெரிந்தாலும், முழு உருவச்சிலைகளே. மண்ணில் புதைபக்கப்பட்டவை சில, மல்லாக்க கிடத்தப்பட்டவை சில. நிமிர்த்துவதற்குள் எதிரிகள் வந்துவிட்டார்கள் போலும்! இன்னும் இறக்கப்படாத ஒரு Moai (இப்படித்தான் அழைக்கிறார்கள்) யின் எடை 2700 கிலோ!

இவ்வாறு உருவாக்கி, நிறுவிய மக்களின் வழித்தோன்றல் ஒருவர் கூட இன்று இல்லை. 15 -18-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் உலகை அறிய கிளம்பி, மற்ற இடங்களில் (மாயன், இன்கா) நிகழ்த்தியதைப் போல இங்கும் மனித வேட்டையாடினார்கள். எஞ்சியவர்களை பெருவிற்கு அடிமைகளாய் கூட்டிப் போனார்கள். மிஞ்சியவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் கொண்டு வந்த தொற்று நோயால் மாண்டார்கள்.

இந்தப் பதிவை இப்பொழுது எழுத வேண்டிய அவசியம்?

நாளை எழுதுகிறேன்.

2 comments:

said...

eagerly looking forward to the next section...

said...

நல்ல கட்டுரை.

கிரேயேட்டிவ் 360க்கு தமிழெழுத ஆர்வமில்லையா?