Skip to main content

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன் வேலையில் மும்முரமானாள். அவளுக்கும் அன்னியன் போல. 'என்ன பண்ணச் சொல்றீங்க?' என் குரல் எனக்கேத் தெளிவாக கேட்க வில்லை. என்னையே சிறிது நேரம் பார்த்தான். 'சித்தப்பா வந்தாருன்னா சேவ் பண்ணச் சொல்வாரு. ஒரு உதவியும் கிடையாது'ன்னு தொடர்ந்தான். பணம் கேட்க அடிபோடுகிறான் என்று நினைத்தேன். ஒருவேளை மிகுந்த மன உளைச்சலில் இருப்பானோ? ஒரு மனிதனின் புலம்பலைக் கேட்கக் கூடவா எனக்கு மனமில்லை. கேட்டு வைக்கலாம்னு அவனைப் பார்த்தேன். 'சித்தியோ ஒண்ணும் பண்ணாது.' சற்று நிறுத்தினான். 'இம்புட்டு சப்பாதிச்சுக் கொடுத்திருக்கேன். இப்ப ஒண்ணும் இல்ல.' எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனாலும் இப்படியே அடுக்கிக் கொண்டு போய் கடைசில பணம் தானே கேப்பான்னு இருவித இகழ்ச்சியும் இருந்தது. அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வெறுமே பார்த்துக் கொண்டு இருந்தான். திடீரென்று கைவிடப்பட்டவன் போல. இதுவரையிலும் பிச்சை எடுத்துப் பழகாததால் வாய்விட்டுக் கேட்கக் கூச்சமாக இருந்திருக்கும்.

சாப்டீங்களான்னு கேட்கத் தோன்றியது. ஆனாலும் துணியவில்லை. சிகரெட்டைக் கீழே போட்டு விட்டு கிளம்ப ஆயத்தமானேன். அவனைப் பார்ப்பதா வேண்டாமா? 'சரிங்க'ன்னு சொல்லிட்டு, அதுவும் எனக்கு மட்டுந்தான் கேட்டிருக்கும், வண்டியைக் கிளப்பினேன். என்னால் வேகமாக வண்டியைச் செலுத்த முடியவில்லை. ஒருவாய் 'சாப்டீங்களா'ன்னு கூடக் கேட்கலையே. திரும்பிப் போய்க் கேட்கலாமா? 'பிழைச்சேன்னு போவியா....' அப்புறம் தொடர்ந்து சென்று விட்டேன். இன்னமும் பிழைத்தவன் என்ற உறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர். அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்ற...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...