காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல்
கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'
வலியன் மறுமொழி
துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே
அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி
கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட
மேவிடுவோர் எண்ணிக்கை மேல்.
பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல்
அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்ஙனம்இல் வாழ்வு துறந்து.
உள்பட - உண்மை உள்ளத்தில் பட
இனியவர் தேடி இரகுவினை அறிதல்
முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்
'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும்
காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே
காடையின் கதறும் ஒலி!
வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல்
கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை
புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை
விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு
மண்ணுற வாழும் முதல்.
உந்தி - துணை, பறவை
முதல் - தொடக்கம்
பறவை உயிரைப் பறித்த தருணம்
துறவி பலுக்கும் இராகம் முதலில்
அமைத்து படிக்கப் பணித்தார் உலகம்
சுவைக்க இராமன் கதை.
அறிமுகம் அடுத்த பகுதி
Comments
இவ்வரிகளை உற்று நோக்கினீரா?
ஈட்டும்பழி-நேர்நேர் நிரை-தேமாங்கனி
கனிச்சீர் வெண்பாவில் வராதல்லவா? இதற்கும் நம்ம பழம்புலவர்கள் ஒரு டெக்னிக் வெச்சிருக்காங்க.
அது என்ன?
அதுதாங்க ஒற்றுநீக்கி அலகிடுதல்.
ஈட்டும்பழி -இச்சொல்லில் உள்ள ம்-என்ற ஒற்று நீக்கின் தேமாங்காய்ச் சீராகிவிடும்.
இதுபோல் ஒற்று நீக்கி அலகிட வேண்டிய இடத்தில் ஈட்டு(ம்)பழி என்று பிராக்கெட் போட்டுவிட்டால் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்
அனைத்து வெண்பாக்களும் அருமை. பாராட்டுக்கள். குறிப்பாய் இறுதிவெண்பா என்னை மிகவும் கவர்ந்தது.
///அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்///
பழியை ஈற்றுச் சீருடன் இணைத்திருக்கலாம், முதலில் நீங்கள் குறிப்பிட்டதால் முன்னுரிமை அதற்கே;-)