இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது. நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும். இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது....