Skip to main content

Posts

Showing posts with the label வெண்பா

இட ஒதுக்கீடு!

ஒதுக்கிய ஊரார் ஒதுக்கும் வழக்கம் ஒதுக்கி ஒடுங்கியோ ருக்கென்(று) இடங்கள் ஒதுக்கிய போதும் ஒதுங்கிட(ம்) இன்றி ஒதுங்கும் நிலையை ஒறு.

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள். கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல் இழந்த இளவல் எனவகைப் பட்டார் அழுந்தும் கடிவாளம் காண். கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல் உறுவல் அழுந்த ஒருவன் இளவல் மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத் தறுக உணர்ந்தாள் தனித்து. தறுக - தவறாக ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள் 'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல் கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத் தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'. அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல் இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள் தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில் வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து. விளர்தல் - வெளுத்தல், வெட்குதல் சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர் 'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம் உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச் சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட கட்டறுந்த கண்கள் கசிந்து. வேற...

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன் புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த கோமகன் மக்கள் குறையற ஆண்டனன் தாமரைப் பூமக ளோடு. கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில் பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய் நன்னிலஞ் செல்ல நசிந்து. குசை - மகிழ்ச்சி கோவில் - அரண்மனை கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள் எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான் வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று. அத்தம் - காடு என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள் சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார் மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு. சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும் நிறையிலை என்பார் இருக்க - பொறையறு மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால் குன்றில் உருண்டதாம் கல். இரியல் - விரைந்து, நிலை தடுமாறி தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம் மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப் பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே பணிந்தான் இளவல் பழிக்கு. பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில் அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான், சுணங்கினான் சோர்வா...

இரகு வெண்பா - காவியம் பாடல்

இராமன் கதை இங்கே நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல் நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று) ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும் பாயிரமாய்ச் செய்தார் பரிந்து. இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல் இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார் வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும் வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத் தேனனையும் பாக்களைத் தான். புகழுறப் பாடி அவைதனை அடைதல் பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர் தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும் ஒக்கவே சென்றார் உவந்து. இசைத்த இளையோர் இருவரும் மன்றில் அசைத்த அகமொரு வாரி - விசையுறு வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே யாசகம் பாடும் சிறார். வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர். மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப் பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில் இடைவெளி வேண்டியேப் பெற்று. சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும் அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில் ச...

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல் கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்; கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும் தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான் 'கருமப் பழியார் உடைத்து?' வலியன் மறுமொழி துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட மேவிடுவோர் எண்ணிக்கை மேல். பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல் அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர் இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன் இங்ஙனம்இல் வாழ்வு துறந்து. உள்பட - உண்மை உள்ளத்தில் பட இனியவர் தேடி இரகுவினை அறிதல் முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார் 'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும் காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே காடையின் கதறும் ஒலி! வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல் கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு மண்ணுற வாழும் முதல். உந்தி - துணை, பறவை முதல் - தொடக்கம் பறவை உயிரைப் பறித்த தருணம் துறவி பலுக்கும் ...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...