Skip to main content

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !

மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு.

'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்'

'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.'

இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது.

'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முகம் கழுவப் போனேன். அப்பவே மணி 5:15. இனிமே ஃபேர்பிரைஸ் போயி எதுவும் வாங்க முடியாது. காப்பிய குடிச்சுட்டு பட, படன்னு ஆயத்தமாகி இருந்த ஒரு அரிசி வடை பொட்டலத்தை (packet? அது பேரும் தெரியலை, சீனத்துல எழுதி இருந்துச்சு) எடுத்துட்டு சாலைக்கு விரைந்தேன். வாடகை வண்டி எடுத்தப்ப 5:50 - 6 மணி இருக்கும். இடையில கோவி அண்ணாட்ட அலைபேசி வர்றேன்னு உறுதிப் படுத்திட்டேன்.

20 நிமிஷப் பயணத்துல அங்க போய் சேர்ந்தேன். யாரையும் முன்னப் பின்ன பாத்தது இல்லை. எப்படி எடுத்துக்குவாங்களோன்னு ஒரு மாதிரி பயந்துட்டே போனேன். கோமளா'ஸ் பின்புறம் கடற்கரையைப் பாத்தாப்புல பேசிட்டு இருந்தாங்க. என்னையப் பாத்ததும் எல்லோருமே இயல்பா கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். யாரும் தாமத்ததிற்கு காரணம் கேக்கலை. 'அப்பாடா'ன்னு இருந்தது. இல்லைனா பொய் ஏதாவது சொல்லணுமே. தூங்குனேன்னு சொல்லத் தயக்கம். அப்படியே எழுந்து கடற்கரையை ஒட்டி கிடையைப் போட்டோம்.

அரசுவின் சில பதிவுகள் படிச்சுருக்கேன். அதனால அவர்ட்ட பேச கொஞ்சம் அச்சமா கூட இருந்தது. கொள்கைப் பிழம்புல சூடு விழுந்துடும்னு நினைச்சுக்கிட்டே போயி...., சரியா அவர் பக்கத்துலேயே உக்காந்தேன். பேசாம விசைப் பலகை ஒட்டிகளை வாங்கிட்டு விலகிடலாம்னு பாத்தா இப்படி ஆயிருச்சேன்னு வரிசைல வந்த அல்வாவை வாயில வைச்சுக்கிட்டு அமைதி ஆயிட்டேன். ஆனா, அரசு என் எதிர்பார்ப்பை பொய்யாக்கிட்டார். ஒவ்வொரு பொருள்லயும் தெளிவாக, புன்னகை மாறாமல், அடுத்தவர் பேச வாய்ப்பளித்து என்னை இயல்பா பேச வைச்சுட்டார். இடையில நாங்க எல்லாம் சேர்ந்து போட்ட மொக்கையையும் ரசிச்சார்.

சிவராம் முருகன் தன் வலைபதிவு நேர்வுகளை விவரிச்சு எல்லோரையும் கல, கலப்பூட்டினார். அதுவும் 'டேய், இது உனக்குத் தேவையான்னு கேட்டு சேமிச்சு வைச்ச பதிவை அழிச்சுருவேன்' ன்னு வடிவேலு மாதிரி சொன்னதும் சாப்பிட்ட அல்வா வெளிய வர்ற மாதிரி சிரிச்சோம். குமார் துபாய் போறதைப் பத்தியும், அதற்கான நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சொன்னார். எவ்வளவு கெஞ்சியும் ஜெகதீசன் பேசவே இல்லை. சாப்பிடப் போனப்ப தான் 'எனக்கு ஒரு தோசை' ன்னு சொன்னார். கிரியும், நானும் வெற மாதிரி துணுக்குத் தோரணத்தைக் கட்டினோம்.

'உங்க வேலையிடம் எந்தப் பகுதில இருக்கு?' பதில் சொல்லவும்

'அங்க தான் என் அலுவலகமும் இருக்கு. எந்த கட்டிடம்', பதில் சொல்லவும்

'அங்க தான் நானும் வேலை பாக்குறேன். எந்த நிறுவனம்?'

'ஆ! நானும் அங்க தான் வேலை பாக்குறேன்!'

வேற, வேற பிரிவுகள்ல வேலை செய்யுறோம். அதனால தான் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கலை.

பிறகு சாப்பிடப் போனோம். எல்லோரும் வேணுங்கிறதை கேட்டு வாங்கிட்டு வந்தாச்சு. கடைசி தட்டை எடுக்கும் போது நானும், அரசுவும் கோவிண்ணாட்ட 'போண்டா என்னாச்சு'ன்னதும், அவர் முகத்துல தெரிஞ்ச கலவரத்தைப் பாக்கணுமே! வேக, வேகமா போயி சீட்டு வாங்கற இடத்துல கேட்டார். போண்டா இல்லைன்னு சொன்னதும் அவருக்கு ஏமாற்றம்னாலும், 'அப்பாடா, என் தப்பு இல்லை' ன்றா மாதிரி ஒரு பெருமூச்சு விட்டார்.

சாப்பிட்ட பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பறிமாறி கொண்டு கிளம்பினோம். மற்ற எல்லோரும் பெடோக் போகணும், நானும் அரசுவும் அமோக்கியோ செல்வதால் தனியாகப் பிரிந்தோம். அங்கே வராத பேருந்துக்காக (ஞாயிறு மட்டுந்தான் வருமாம்) ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. இனிமையான சந்திப்பின் முத்தாய்ப்பாக அந்த ஒருமணி நேர உரையாடல் அமைந்தது. பின்னர் வேறு பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். மணி அப்போது 11ஐத் தாண்டி இருந்தது!

டோன் லீ வருவார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் பதுங்கு குழிக்குள்ளேயே இருந்து விட்டார் போல. என்னைக் கவர்ந்த அறிமுகப் பதிவர்களில் அவரும் ஒருவர்.

Comments

கிரி said…
//பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு.//

//வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முகம் கழுவப் போனேன். அப்பவே மணி 5:15.//

என்னங்க காலையில 5.30 மணிக்கு வர சொன்ன மாதிரி சொல்லுறீங்க.. பதிவர்களே பதிவர் சந்திப்பு நடந்தது மாலையில் தான் யாரும் கலவரம் அடைய வேண்டாம் :-))))

//சாப்பிட்ட அல்வா வெளிய வர்ற மாதிரி சிரிச்சோம்.//

உங்களுக்கு செந்தில் கொடுத்த ஹல்வா ரொம்ப பிடித்து விட்டதுன்னு ஒத்துக்கொள்கிறோம் ஹி ஹி ஹி

//வேற, வேற பிரிவுகள்ல வேலை செய்யுறோம். அதனால தான் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கலை.//

இப்படி தான் பல நிறுவனத்துல இருக்காம்.

//நானும் அரசுவும் அமோக்கியோ செல்வதால் தனியாகப் பிரிந்தோம். அங்கே வராத பேருந்துக்காக (ஞாயிறு மட்டுந்தான் வருமாம்) ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.//

நல்லா வேளைடா கிரி நீ தப்பிச்சே :-)))

முகுந்தன் இந்த மாதிரி பல பதிவுகளை போட்டு தாக்குங்க.
:)
பதிவு நல்லா இருக்கு...

//
முகுந்தன் இந்த மாதிரி பல பதிவுகளை போட்டு தாக்குங்க.
//
??? முகுந்தன் யாரு??
கிரி, ஜெகதீசன் வருகைக்கு நன்றி!

//என்னங்க காலையில 5.30 மணிக்கு வர சொன்ன மாதிரி சொல்லுறீங்க.. //

இடுகை, மணி மாலை நாலரைன்னு தானே துவங்குது?

//நல்லா வேளைடா கிரி நீ தப்பிச்சே :-)))//

பாரி கூட தனிப்பட்டு பேசற வாய்ப்பை தவற விட்டுட்டீங்க! இனிமையான மனிதர்!

முகவை மைந்தனை, கிரி முகுந்தனா சுருக்கிட்டாருன்னு நினைக்கிறேன்! சரியா கிரி?
Sivaram said…
//அரசுவின் சில பதிவுகள் படிச்சுருக்கேன். அதனால அவர்ட்ட பேச கொஞ்சம் அச்சமா கூட இருந்தது. கொள்கைப் பிழம்புல சூடு விழுந்துடும்னு//


அதே எண்ணம் எனக்கும் முதலில் இருந்தது..

//முகுந்தன் யாரு?//

அட இந்தப் பேரு நல்லா இருக்கே !!
கிரி said…
//இடுகை, மணி மாலை நாலரைன்னு தானே துவங்குது?//

ஆனா பதிவர் சந்திப்பு சொன்னது 5.30 தானே ..அதுனால நாமளே போட்டுகிட்டோம்

//முகவை மைந்தனை, கிரி முகுந்தனா சுருக்கிட்டாருன்னு நினைக்கிறேன்! சரியா கிரி?//

ஹி ஹி சரி தாங்கோ ..

உங்க உண்மையான பேரு இந்த பேரு எல்லாம் சேர்ந்து கொஞ்சம் குழம்பி விட்டேன்..மன்னித்துக்குங்கோ
அடுத்தமுறை லேட்டாக வந்தால் ஆனந்தபவன் ஸ்வீட்டோடு தான் வருனும்...ஸீவிட் போட்டது வேண்டாம்.
:)
ஜீவன் வருகைக்கு நன்றி.

கிரி, 'மனசாட்சி'யே இல்லாம மாளவிகா படம் போட்டுருக்கீங்க! உங்களால தூங்க முடியுற மாதிரி ஒரு பொண்ணு படம் போட வேண்டியது தானே?

//ஸீவிட் போட்டது வேண்டாம்//
அப்படின்னா? நீங்களும் அடுத்த தடவை மறக்காம போண்டா வாங்கிக் கொடுத்துடணும்... ஆஆங்ங்ங்
//உங்களால தூங்க முடியுற மாதிரி ஒரு பொண்ணு படம் போட வேண்டியது தானே?//

'உங்களால தூக்க முடியுற' ன்னு வந்துருக்கணும். பின்னூட்ட கயமை பண்ணிடக் கூடாதுன்னு சேத்து , சேத்து பின்னூட்டம் போட்டேன். கடைசில இப்படி ஆகிப் போச்சு.
Anonymous said…
உள்ளேன் ஐய்யா
அன்புடன்
சிங்கை நாதன்
ராம்..
கலக்கர போ. :-)
//சிங்கை சிங்கங்களின் சந்திப்பு//

அசிங்கமா இல்லாமல் அழகாக எழுதி இருக்கீங்க..
எதோ வடைன்னு எழுதி இருக்கீங்க.

அரிசிவடை?????

புதசெவி
//டோன் லீ வருவார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அவர் பதுங்கு குழிக்குள்ளேயே இருந்து விட்டார் போல. என்னைக் கவர்ந்த அறிமுகப் பதிவர்களில் அவரும் ஒருவர்//

மன்னிக்கவும்.. சொந்த அலுவல் ஒன்று காரணமாக வரமுடியவில்லை..கண்டிப்பா அடுத்த முறை வருகிறேன்..!
கிரி said…
//'உங்களால தூக்க முடியுற' ன்னு வந்துருக்கணும். //

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்" னு எதாவது ஒல்லியான சங்கி மங்கி பிட்டு படத்தை போட சொல்றீங்களா? உங்க பரந்த மனசை நினைத்து சந்தோசமா இருக்குங்க .. ;-)
சிங்கை நாதன், நீங்க பந்தையம் வச்சதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா கண்டுபிடிக்க உளவுத்துறை ஒண்ணு தீவிரமா களத்துல இருக்குன்னு மட்டும் தெரிவிச்சுக்கிறேன்.

மனதின் ஓசை, அப்துல்லா வருகைக்கு நன்றி.

வாங்க, டொன் லீ. அடுத்த சந்திப்புல கலக்கிடலாம்.
துளசியம்மா, அது என்னன்னே தெரியலை. அரிசில பண்ணது தான். மொறு, மொறுன்னு நல்லா இருக்கும். விரும்பி சாப்பிடுவேன். முதல்ல நல்லா இருக்கும்னு சான்றிதழ் தந்த கோவி, கடல் பாசி தூவினது, நல்லா இல்லன்னு வைச்சுட்டார்;-(
@கிரி
//ஒல்லியான சங்கி மங்கி பிட்டு படத்தை//

ம்ம்ம்... தோள்ல துண்டு, கையில குடைன்னு கொஞ்சம் உள்ளூர்த் தோற்றத்துல இருந்தா, கிண்டல் பண்றீங்களே!
இப்பப்'புரியுது. பிஸ்கெட் வகையில் வரும் ரைஸ் க்ராக்கர்ஸ்தானே?

இது கொஞ்சம் 'தட்டை' மாதிரி இருக்கும். வடைன்னு சொன்னதும் 'ஆடிப்போயிட்டேன்'!!!!!
ஆமால்ல, இனிமே தட்டைன்னே சொல்லேன். நல்ல சொல் தந்ததற்கு நன்றி.

Popular posts from this blog

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர். அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்ற

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து