என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள்.
ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை.
இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு.
ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு.
பிரிவுன்னா அப்படித் தான்.
ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு.
மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை
அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன்.
தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்தான். நான் தனியா தண்ணிக்குள்ள நின்னது வியப்பு அவனுக்கு.
யாரும் கூட வரலை?
ரொம்பத் தான் ஆசைன்னு நினைச்சுக்கிட்டு, பூப்பறிக்க வந்தேன்னு சொன்னேன்.
சுனைலயா பூப்பறிகிறன்னு கிண்டலாச் சிரிச்சான்.
ம், இந்தா மிதந்து வருதுல்ல அந்தப் பூக்களை எடுத்து மாலை கட்டுவேன்னு சொன்னேன்.
அதுல மணமிருக்காதேன்னு கேட்டான்.
பூ செடிக்குச் சொந்தம். பறிக்கிறது அத்துமீறல் தானே என்று அவனை ஆழமாப் பாத்தேன்.
அவன் பார்வை கீழ போயிருச்சு. அந்த நேரம் குமரியும் வந்துட்டா. அவள்ட்டயும் பேசிட்டு என்னைப் பார்த்தமேனிக்கு கிளம்பிப் போய்ட்டான். பூப்பறிக்க சுனைக்கு வந்ததா நான் சொன்னதை நம்பிட்டானோ!ன்னு இருந்தது.
===========================================
ம், உதிர்ந்து சுனைல விழுந்த பூவை இந்தப் பூவை சூடத் தொடுத்ததா அவன் நம்புனான்னா ரொம்பவே உன்ட்ட மயங்கிட்டான்னு தான் பொருள். வேற என்ன கதை வைச்சிருக்க.
சொல்றேன்.
மீள்நிகழ்வு - புனக்கிளி கடிந்தவள்
மற்றொரு நாள் புனக்காட்டில் இருந்தேன். கேப்பை - கேழ்வரகு போட்டிருந்தோம். புனம்ன்றது சிறுன்ற பொருள் தரும். புனக்காடுன்னா சிறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்ட நிலம். மலைச்சரிவுல நீண்ட பரப்புடைய நிலமா அமைக்க முடியாது. தவிர, சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவதாலும் அது புனக்காடு. சிறுதானியத்தைப் புன்செய்ப் பயிர்கள்ன்னும் சொல்லுவோம். அந்தக் காட்டுல மேய்ற பறவைகள் குருவிகளும் கிளிகளும் தான். குருவிகள் சின்னதா இருக்கதால புனக்கிளின்னு சொல்றமா, இல்ல புனக்காட்டில் மேயும் கிளிகளை புனக்கிளின்னு சொல்றமான்னு யாருக்கும் தெரியாது. பொதுப்பெயர்
தொலைவுல நாடன் வர்றதைப் பாத்துட்டேன். அவங்க காட்டுக்குப் போறோன் போல. அவனை எப்படிக் கூப்பிடுறது? கவண் வில் எறியலாமா? பாத்துட்டு குருவி விரட்டுறதா நெனைச்சிட்டுப் போயிட்டான்னா? திடீர்ன்னு ஏய், சூ, ஓ, ஆ, அய்யோன்னு கத்துனேன். அவனுக்குக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். நான் எம்பி எம்பிக் கத்தி அளப்பறையக் கூட்டுனேன். ஓடி வந்தான். ஏன் இப்படிக் கத்துறன்னான். நான் எங்கக் கத்துனேன். கிளி விரட்டுனேன்னேன். அதான் கவண் வில் இருக்குல்ல. அதுல கல் ஏத்தி அடிக்க வேண்டியது தானேன்னு பரண் நிழலுக்கு வந்த படி கேட்டான். நானும் உக்காந்துட்டேன். கிளிக்கு அடிபடாதா? கூட்டுல காத்திருக்க குஞ்சுகளுக்கு யார் ஈடு வைக்கிறதுன்னு பார்வையை வேறுபுறம் திருப்பியவாறு கேட்டேன். சரியாப் போச்சு, இந்தப் பட்டம் கேப்பை வீட்டுக்கு வந்த மாதிரி தான் என்றான். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அவன்ட்ட பேசும் போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறகு அவங்க காட்டுக்குப் போய்ட்டான்.
====================================
நீ ரொம்பவே விவரந்தான். கூப்பிடணும் ஆனா அவனா வந்த மாதிரி இருக்கணும்ன்னு திட்டம் போட்டு செயல்பட்ருக்க.
இப்ப அவன் என்னைப் பத்தித் தான் கவலைப்பட்டுக்கிட்டு இருப்பான். அவன் பெருமூச்சு என் கூந்தலை அளையிற மாதிரி கிட்டத்துல உணர்றேன்.
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான்அறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்தென்
உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!
Comments