Skip to main content

சுனைப்பூ சூடியவள் - இன்று மலர்ந்தவை

தேனு, உன்னைய எனக்கு ரொம்பப் புடிக்கும்

இன்னிக்கு தான் தோணுச்சாக்கும்

எப்பவுமே புடிக்கும் தேனு

எனக்கு அப்படித் தெரியலையே

மெய்யாலுமே தேனு

ம், சரி எவ்வளவு புடிக்கும், ஒரு காப்படி?

அய்யோ, நான் உண்மையத்தான் சொல்றேன். என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவுலயும் உன்னைத் நிறைச்சிருக்கேன் தெரியுமா!

கதை விடற. எப்படி நான் நம்புறது?

வேணும்னா என் மூச்சுக் காத்தைக் கேளு.

அப்ப மூச்சுல முடிஞ்சு வைச்சிருக்கன்னு சொல்லு.

நான் முடிச்சு வைக்கல. உன் நினைப்ப உடம்போட ஒவ்வொரு நாளமும் காத்தா முடிச்சு வைச்சு அனுப்புது.

அப்ப என் நினைவுகள் கொஞ்சநாள்ல தீந்து போயிருமே?

அப்ப புதுசா காத்தை உள்ள இழுத்து உன் நினைவுகளை முடிஞ்சு உள்ள அனுப்புவேன்.

உன் பேச்சு தான் என்னய இப்படி கிறுக்கா உக்கார வைச்சிருக்கு.

இருவரும் பேசவில்லை. ஒரே நேரத்தில் பெருமூச்சு எழுகிறது.

ம், இப்படி பெருமூச்சு வந்ததே, அது என்னவாம்.

தீராத ஏக்கம் இருந்துச்சுன்னா ஏக்கம் இன்னும் பல எண்ணங்களை உருவாக்கும். அந்ம எண்ணங்களின் முடிச்சுகள் காத்துல நிரப்பி அனுப்ப நேரமாகும். அதனால மூச்சு பெரிசாயிரும்.

மகிழ்ந்து சிரிக்கிறாள்.

உன்னய மடக்க முடியாது.

நீ எம்மேல நம்பிக்கை இல்லாமத் தானே இவ்வளவு கேள்வி கேக்குற.

அப்படில்லாம் இல்ல. ஆனா உன்னய பாத்தா எனக்கு நிறைய கேக்கத் தோணும்.

அப்படியா, வேற என்ன கேக்கத் தோணுது?

என்னய உனக்கு ரொம்பப் புடிக்குமா?

பேதைப் பெண் நீ

என்னைய முட்டாள்னா சொல்ற

நீ முட்டாள்னா உன்ட்ட மனசப் பறிகொடுத்த நான் அறிவாளியா? தெரிஞ்சத திரும்பக் கேக்குறியே அதனால சொன்னேன்.

அப்படின்னா என்னைய விடவும் பேதைமையான பெண் யாரும் இருக்காளா?

நீ போட்டு வாங்குற. எனக்கு நேரடியாத் தெரியாது, ஆனா சொல்லிருக்காங்க.

எனக்கும் சொல்லேன்.

அந்தப் பெண் ஓடையில் பூத்த மலர்களைச் சூடுவாளாம். தினைக்காட்டுல குருவிகளை கல்லால விரட்டாம செல்லமா கடிந்து பேசுவாளாம். அந்தளவு பேதையாம் அவள்.

அடிப்பாவி!  இவள வச்சு எப்படிக் குடும்பம் நடத்துறது?

அவன் சொல்றான், அதைக் கூடப் பொறுத்துக்குவேன். இப்பப் பணம் சம்பாதிக்க அசலூர் வந்துருக்கேன். நான் நாளும் அவளை நினைச்சு நள்ளிரவு தூங்கும் யானையின் மூச்சைப் போல் பேரொலி கிளப்பும் ஏக்கப் பெருமூச்சு விடுவதை பேதை அவள் அறிவாளா? நான் அவள மறந்துட்டேன்னு துன்பப் படுவாளேன்னு கண்ணீர் விடுறான்.

பாவம் இல்ல! இதை வைச்சுத்தான் இன்னிக்கு மூச்சுல கலந்தவளேன்னு என்ட்ட படம் ஓட்டுனியா?

சிரிப்பு.

உனக்கு எப்படி இந்தக் கதை தெரியும்?

ஒரு பாட்டுல படிச்சேன்.

எனக்கும் சொல்லேன்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் 

புனக்கிளி கடியும் பூங்கண் பேதை 

தானறிந் தனளோ இலளோ பானாள்

பள்ளி யானையி னுயிர்த்தென் 

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

Comments