நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும...